Tuesday, 30 April 2013

ஹரிதாஸ் - சினிமா விமர்சனம்


haridas
பெருமையுடன் குறிப்பிடத் தகுந்த தமிழ்ப்படங்களின் இந்தியப்பட்டியலில் இந்தப் படத்தையும் குறித்துக் கொள்ளலாம்.
மனித மனசாட்சியை இருவேறு நிலைகளுக்குக் கடத்தும் கதையை சமூகப் பொறுப்புடனும், ரசனை குன்றாத கலை வடிவமாகவும் சொல்ல முயன்றிருக்கும் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும், அதனை சமன் செய்துகொள்ளாத நேர்த்தியுடன் தயாரிக்க ஒத்துக்கொண்ட தயாரிப்பாளர் டாக்டர் ராமதாசுக்கும் வந்தனங்களை முதலில் சொல்லியே ஆக வேண்டும்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் கிஷோர்தான் கதை நாயகன். படத் துவக்கத்திலேயே பிரபல ரவுடியின் கூட்டாளியாக இருப்பவனை சுட்டுக்கொன்று, தப்பிப்போன ரவுடியைக் கொல்லும் தோட்டா தன்னிடம்தான் இருக்கிறது என்று கமிஷனரிடம் விரைப்பாகச் சொல்லும் மிடுக்கில் கவர்கிறார்.
அந்த விரைப்பைக் கரைக்கிறது அம்மா ஊரில் இறந்துபோனதாக வரும் செய்தி. இறந்துபோன அம்மாவிடம் வளரும் கிஷோரின் பத்து வயது மகன் வடிவில் வருகிறது இன்னொரு சவால்.
பிரசவத்துக்குப்பின் மனைவி இறந்து போயிருக்க, இயல்பான மன வளத்தில் இல்லாத 'ஆட்டிஸம்' என்கிற பாதிப்பிலிருக்கிறான் அவரது மகன். 'தனியாக சிந்தித்து வாழத் திறன் இயலாத' அவனைத் தேற்றி எடுத்து இயல்பான வாழ்க்கையில் வெற்றிக்கோட்டைத் தொட கிஷோர் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் கதை..!
அம்மா இறந்த செய்தியை சின்ன அதிர்வுடன் எதிர்கொள்ளும் நடிப்பில் மில்லி மீட்டர் எகிறாமல் மின்னும் கிஷோர், தன் மிடுக்கும், ஆற்றலும் மகனின் நலத்தில் கரைந்துபோய், மாநகராட்சிப் பள்ளியில் அவனுடன் அமர்ந்து ஆரம்பப் பாடத்தை எதிர்கொள்ளும் வேளையில் சாமானியனாக குறுகித் தெரிகிறார்.
மகன் காணாமல் போய்விட்ட செய்தியை அழுது கொண்டே சொல்லும் நாயகி சினேகாவிடம் தன் தவிப்பை மறைத்தபடி, "அழாம சொல்லுங்க...!" என்று அதட்டலாக கட்டளையிடும்போது பண்பட்ட அதிகாரியாகவும் மிளிர்கிறார். மகனின் பிரச்சினை புரியாமல் போலீஸை அழைக்கவிருப்பதாக எகிறும் கடைக்காரரிடம் "நானே போலீஸ்காரந்தாண்டா..!" என்று சீறுமிடத்தில் பின்னி எடுத்திருக்கிறார்.
haridas
அவருக்கு இணையாக வாய்ப்பும், அதை ஈடு செய்யும் விதத்தில் நடிப்பென்றே தெரியாத நிஜமுமாக வந்திருக்கிறார் சினேகா. மாணவர்களுக்கிடையில் ஒரு முரட்டு மனிதனாக கிஷோர் அமர்ந்திருக்க, அவரை வைத்துக்கொண்டு இயல்பாகப் பாடம் எடுக்க முடியாமல் திணறுவதில் ஆகட்டும், அவருடைய பரிதவிப்பையும், பையனின் நிலையையும் கருத்தில் கொண்டு, அவனுக்கு அம்மாவாக வாழ முடிவெடுக்கும் உறுதியிலும் 'வாழ்ந்தே பார்த்திருக்கிறார்' சினேகா.
பையனின் நிமித்தம் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் கிஷோரின் மீது ஏற்கனவே கோபத்திலிருக்கும் அம்மாவிடம் அவரைத் திருமணம் செய்யும் முடிவைச் சொல்ல, அந்த நேரம் பார்த்து கிஷோரிடமிருந்து போன் கால் வருகிறது.
கிஷோரை நாலு வார்த்தை திட்ட அம்மா பாய்ந்து அந்த செல்போனை எடுக்க முயல, உனக்கு அந்த சிரமமே வேண்டாம் என்பது போலவும், எப்படியும் நல்ல மனம் கொண்ட கிஷோர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்க மாட்டார் என்றும் உறுதியாக நம்பும் நோக்கிலும் சினேகா, அந்த போனின் ஸ்பீக்கரை 'ஆன்' செய்கிறார்.
அதில் எதிர்பார்த்தது போலவே சினேகாவின் முடிவை கிஷோர் மறுப்பதுடன் அவர் அம்மாவின் சூழ்நிலையையும் நியாயப்படுத்த, அம்மா வாயடைத்து நிற்பதும், "நீயே உன் காதால் கேட்டாயல்லவா..? இப்போதாவது அந்த மனினைப் புரிந்து கொள்..." என்பதையும், தன் விரக்தியையும் ஒன்றுசேர்த்து சினேகா பார்க்கும் அந்த 'மையப்பார்வை...' நூறு விருதுகளுக்கு சமம்.
கிஷோருக்கும், சினேகாவுக்கும் ஈடாக, நடிப்பென்றே தெரியாத அந்த பத்து வயது சிறுவன் 'உண்மையிலேயே அவன் அப்படித்தானா..?' என்கிற அளவில் பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறான்.
இப்படியே படம் முழுமையும் சிலாகித்துச் சொல்ல ஏகப்பட்ட காட்சிகள் நிறைந்திருப்பது குமரவேலனின் இயக்கத் திறமைக்குச் சான்று. கிஷோரின் போலீஸ் சகாக்களில் வில்லனிடம் மாட்டிக்கொள்பவர் மற்றும் அவரது பெற்றோரின் பாத்திரங்கள் நினைவில் நின்று நெகிழ வைக்கின்றன.
கிஷோரின் டிரைவராக வரும் பரோட்டா சூரி காமெடிக்கும், குணச்சித்திரத்துக்கும் பயன்பட்டிருக்கிறார். முக்கிய பாத்திரங்கள் தவிர்த்து கிஷோரின் சித்தப்பா, பையனின் பிரச்சினையை விளக்கும் டாக்டர் யூகிசேது, ஓட்டப்பந்தய பயிற்சியாளர் ராஜ்கபூர் என்று சின்னச் சின்னக் கேரக்டர்களை ஏற்றிருப்பவர்களும் பரிமளித்திருப்பது இயக்குனரின் திறமை மட்டுமே.
haridas
ஒரு கட்டத்தில் வில்லன் கையில் கிஷோரின் மகனும் சிக்குவான் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே போய், அந்த சினிமாத்தனத்தை தவிர்த்திருப்பதும் தேர்ந்த இயக்க உத்தி.
வெற்றியின் சின்னமான குதிரையை போராட்ட வாழ்வின் வெற்றிக்கான குறியீடாகவும் ஆக்கியிருக்கும் சிந்தனை 'பலே..!'
துருத்தாத... ஆனால் பொருள் பொதிந்த வெங்கடேஷின் நறுக்கு வசனங்கள் படத்தின் பலம். டாக்டர் பேச வேண்டியதை பயிற்சியாளரும், பயிற்சியாளர் பேச வேண்டியதை டாக்டரும் பேசுவதும், அதையும் டாக்டரே புரிந்து சொல்லும் இடமும் 'கைத்தட்ட' வைக்கும்.
படத்தின் உயிர் ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. பிரமாண்ட 'எந்திரன்' ஒளிப்பதிவாளர் இந்தச் சின்னப் படத்துக்கும் ஒத்துக்கொண்டது ஸ்கிரிப்டின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது புரிகிறது. அவர் திறமையில் இந்தியத் திறன் உலகத் திறனுடன் போட்டியிடுகிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியின் பின்னணி இசையும் படத்தின் பண்பட்ட நேர்த்தியில் தன்னை இணைத்துக் கொள்கிறது.வாய்ப்புகள் இருந்தும் தைரியமாக 'சினிமா க்ளிஷே'க்களைத் தவிர்த்திருக்கும் படத்தில் ஒட்டாமலிருக்கும் அந்த போலீஸ் கானாவைத் தவிர்த்திருந்தாலும் தவறில்லை.
தமிழிலும் ஒரு 'தாரே ஜமீன் பர்' தரும் இயக்குநர் இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தருகிறது படம். "ஆனால் அதை உலகுக்கு உரத்துச் சொல்ல ஒரு 'ஆமிர்கான்' இங்கிருக்கிறாரா..?" என்பதுதான் 'கேட்க வேண்டிய' கேள்வி.
- வேணுஜி

No comments:

Post a Comment