Tuesday, 30 April 2013

பரதேசி - சினிமா விமர்சனம்


paradesi
பரதேசி வழக்கமான படமல்ல... வழக்கமான பாலாவின் படமும் அல்ல... இதுவரை வந்த பாலாவின் படங்கள் மனித மனவியலின் அடிப்படையில் அமைந்த புனைவுக் கதைகளைத் தாங்கி வந்தன. செய்தியை நேரடியாக உணர்த்துவதாகவும் இருந்தன.
அவர் இப்போதுதான் ஒரு படம் ஆற்ற வேண்டிய சமூகக் கடமையை முன்வைத்து ஒரு முழுமையான படம் எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். 'நான் கடவுள்' படமும் சமூகத்தைப் பிரதிபலித்து எடுக்கப்பட்டிருந்தாலும் அதன் கிளைமாக்ஸில் படத்தின் சாரம், பிரச்சாரமாக இருந்தது நெருடியது.
'பரதேசி'யில் வரலாற்று நிகழ்வுகளைக் கதையாக அமைத்துக் கொண்டிருக்கும் பாலா, பார்வையாளனை சிந்திக்க வைத்துப் படத்தை முடித்திருக்கிறார். இதுவரை தன் படங்களில் பாலா என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தது போக, இம்முறை பாலாவின் படம் என்ன சொல்கிறது என்று பார்க்க நேர்ந்திருப்பது ஆரோக்கியமான முன்னேற்றம்.
வெள்ளைக்காரன் ஆட்சியில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய ஆட்கள் வேண்டி தென் மாவட்டங்களிலிருந்து 'கால்நடை' யாக அழைத்துச் செல்லப்பட்டு 'கால் நடைகளை' விடக் கேவலமாக நடத்தப்பட்ட பரதேசிகளின் கதை இது.
முன்பாதி வறண்ட செங்காத்து பூமியின் வளமான மனித வாழ்க்கை: பின்பாதியில் பச்சைப் பசேலென்ற பூமியில் அமைந்த அதே மனிதர்களின் வறண்ட வாழ்க்கை - இதுதான் 'பரதேசி'.
'நாயமா....ரே.....' (நியாயமானவர்களே...!) என்று பறை தட்டிக்கொண்டு வரும் அதர்வாவின் வெள்ளந்திப் பாத்திரம் அவருக்கு ஆகப் பொருத்தம். எடுப்பது கௌரவப் பிச்சை என்றாலும் தன்னை ராஜாவாகக் கருதிக்கொண்டு "இல்லேன்னா சொல்லு...ராஜா வண்டியைத் திருப்பிடுவேன்..." என்று 'பிகு' பண்ணுவதும், நாள் முழுக்க ஊருக்கு உழைத்தாலும் ஒரு வாய் சோறு பெறக்கூட அருகதை இல்லாத ஆற்றாமையைத் தனியே அமர்ந்து பறை தட்டிப் போக்கிக் கொள்ளும் கொந்தளிப்பும் அதர்வாவின் கலைப்பயணத்தில் ஒரு மகுடம்.
அவரை சீண்டிப் பார்த்தே சுகம் காணும் 'அங்கம்மா' வாக வேதிகா. தான் நடித்த படத்தைத் தானே பார்க்க முடியுமா அவரால் என்று தெரியவில்லை. அந்த வெள்ளைப் பெண்னை அநியாயத்துக்கு கறுப்பியாக்கி அலைய விட்டிருக்கிறார் பாலா. இப்படி நடிக்க ஒத்துக்கொண்ட வேதிகாவின் மனத்துணிவுக்கு 'வெல்டன்' சொல்லலாம்.
paradesi
இயல்பாக மேலே பட்ட அதர்வாவின் கைகளில் ஆண் சுகமறிந்து பொய்யாக கண்டிப்பு காட்டி பின் அவனிடம் தன்னை இழக்கும் அந்தச் சின்னக் காட்சி காதலின் சின்னம். பஞ்சாயத்து வரை தங்கள் காதல் வந்து விட்ட நிலையிலும் அதே குறும்புடன் அதர்வாவைத் தன் கோலிகுண்டுக் கண்களால் மிரட்டி, சத்தியம் செய்யாதே என்று அதட்டும் அழகும், கை வைத்தவன் பஞ்சம் பிழைக்கப்போய்விட, வயிற்றில் வளரும் குழந்தையுடன் வழி மீது விழி வைத்துப் பார்த்திருக்கும் பரிதவிப்பும் அருமை.
இரண்டாவது பாதியில் மட்டுமே வந்தாலும், தன்ஷிகா மனதில் நிற்கிறார். கட்டியவன் ஓடிவிட இன்னொருவனைத் தன் நிழலில் கூட அனுமதிக்காத கண்டிப்பு இருந்தாலும் அதர்வாவின் அப்பாவித்தனம் அறிந்து அவர் வலிகளில் ஒரு தாயாக அரவணைப்பது நெகிழ வைக்கிறது.
(ஜேடி) ஜெர்ரியா அது..? வெள்ளைக்காரன் தயவில் உண்டு கொழுத்த கங்காணியாக மிரட்டி விடுகிறார். அதற்கும் சேர்த்து வெள்ளைக்காரனிடம் அடிவாங்கி பொய்யாகப் பணிந்து தன் இருப்பை நிறுத்திக் கொள்வதும் இயலாமை கொண்ட சுயநலம். அதர்வாவின் பாட்டியாக வரும் 'கச்சம்மாள்' என்கிற ஒரு மூதாட்டி இந்த மண்ணின் அடையாள 'மாதா..!'
உதய் கார்த்திக், ரித்விகா என்று புதிய முகங்களும் முக்கியப்பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். தானே படித்து டாக்டரான மோகனும், டாக்டர் பரிசுத்தமாக வரும் சிவசங்கரும் ரசிக்க வைக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் விசுவாசியான சிவசங்கர், "என் அப்பா (இயேசு) குணமாக்குவார்..." என்று சொல்ல, "உங்கப்பாவும் டாக்டரா..?" என்று மோகன் கேட்பது நல்ல நகைச்சுவை.
ஒரு வருடத்தில் பணக்காரர்களாகத் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையுடன் பயணம் கிளம்பிய உற்சாகம், 48 வது நாளில் உயிருக்குப் போராடும் ஒருவனை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டுப் போக நேரும்போது தளர்ந்து, தேயிலைத் தோட்டத்திலிருந்து தப்பிக்க முயன்றவனை அடித்து புரட்டி இழுத்து வரும்போது நொறுங்கி, வருட இறுதியில் அத்தனை சம்பளத்தையும் காரணம் சொல்லிப் பிடித்துக் கொண்டு மீதிக்கு இன்னும் பல வருடங்கள் உழைக்க நேரும் என்று தெரிய வருகையில் சுக்கலாகிப் போவதும் கொடிய வரலாறு.
அதிலும் தப்பிக்க முயன்ற அதர்வாவின் கால் நரம்புகளை வெட்டுவதும், ஓடிப்போன கணவன் கடனை அடைக்க தன்ஷிகாவின் பணிக்காலம் நீட்டிக்கப்படுவதும், அவள் இறந்து போன நிலையில் அவள் மகளுக்கு ஆறுதல் தந்த காரணத்துகாக அதர்வாவின் தலையில் தன்ஷிகாவின் பொறுப்பையும் ஏற்றி இன்னும் ஒன்பது வருடப்பணி நீட்டிப்பு செய்வதும் அந்தமான் சிறைக் கொடுமையை விடவும் பெரிது.
இத்தனை செந்நீரும், கண்ணீரும் கலந்த துன்பியல் வாழ்வில் அங்கங்கே இழையோடும் நகைச்சுவை பாலைவன நீரோடை. குறிப்பாக உள்ளூரில் ராஜாவைப்போல் கணக்கில்லாத சின்ன வீடுகள் வைத்திருந்த தாத்தா, அந்தக் கணக்கை தன் இப்போதைய மனைவியிடம் கேட்க, "அதை உன் மந்திரிகிட்ட கேளு..." என்பது. அதற்கு சற்று முன்னர்தான் அகல கால்விரித்து உட்கார்ந்திருக்கும் அவரிடம் "பாத்து ராசா... உன் மந்திரி வெளியே தெரிஞ்சுடப் போறான்..." என்று கமெண்ட் அடிக்கிறார் அதர்வா.
வெள்ளைக்கார துரையாக வரும் 'டிம்', "இந்த வெட்டிப்பயல்களுக்காக வழக்கறிஞர் காந்தி ஏன் போராடுகிறார்..?" என்பதும், அதற்கு இன்னொரு வெள்ளைக்காரப் பெண்மணி கொதித்துப்போய் காந்தியின் சுயநலமில்லாத போராட்டத்தையும், தியாகத்தையும் சொல்லுமிடம் கைத்தட்டல் பெறும்.
இப்படி வலியும், வக்கணையுமாக எழுதப்பட்ட வசனங்களில் நாஞ்சில் நாடனின் அனுபவம் மிளிர்கிறது. படத்தின் மொத்த வலியையும் சில வரிகளில் சொல்லிவிட முடிந்த வைரமுத்துவின் பாடல்களுக்கு இந்த வருட தேசிய விருது காத்திருக்கிறது.
paradesi
ஒளிப்பதிவாளர் செழியனுக்கு இது 'மாஸ்டர் பீஸ்'. வறட்சியுனூடே வெளிச்சத்தையும், வளமையினூடே இருண்மையையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் அங்கங்கே கே.வி.மகாதேவனிலிருந்து இசைஞானி வரை வந்து போனாலும் அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஒரு வரலாற்றுக் கதையை இரண்டே கால் மணிநேரத் திரைக்கதையாக சுருக்கும் அவஸ்தையில் வெற்றியே கண்டிருக்கிறார் பாலா. இடைவேளைக்கும், கிளைமாக்ஸுக்குமான இடங்கள் துல்லியமாக வரையறுக்கப் பட்டிருக்கின்றன.
காணவே முடியாத தன் மனைவியையும், மகனையும் கண்ணால் கண்டுவிட்ட ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல், அவர்களும் இந்த மீளாப்பயணத்தில் இணைந்து விட்ட சோகத்தில் கதறும் அதர்வாவின் ஒற்றை அழுகை உலகெங்கிலும் அடிமைகளாக்கப்பட்ட தொழிலாளர்களின் ஒட்டுமொத்த காலச்சுவடு.
'நான் கடவுளி'ல் தடுமாறி, 'அவன் இவனி'ல் அடி சறுக்கிய பாலா, இந்தப் படத்தில் எழுந்து நிற்கிறார். பத்திரிகையாளர் காட்சிக்கு வந்திருந்த அவர், "இதில் என்ன குறை இருந்தாலும் சுட்டுக் காட்டுங்கள். அது நான் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்..!" என்றது கூட படத்தில் அவ்வளவாக குறைகள் இல்லை என்று அவரே நம்பியதன் வெளிப்பாடுதான்..!
படைப்பு நிலையைத் தாண்டி படத்தின் வணிக ரீதியான வெற்றி, வெகுஜன ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. அதனால்...
நாயமா...ரே..! நல்ல தீர்ப்பு சொல்லுங்க..!
- வேணுஜி

No comments:

Post a Comment