"ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு..." என்று 'சிங்கம்' முதல் பாகத்தில் சூர்யா 'பஞ்ச்' வைத்தபோது யாரும் எடை மிஷினைத் தூக்கிக் கொண்டு வந்து அது சரிதானா என்றெல்லாம் பார்க்காமல் அந்த வீரியத்தை ரசிக்கவே செய்தார்கள்.
அந்த வெற்றி தந்த தைரியமே இயக்குனர் ஹரியை சிங்கம் படத்தின் சீக்குவலைத் தயார் செய்ய வைத்திருக்கிறது. ஹரியின் HURRY யான திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மேலுள்ள நம்பிக்கை காரணமாகவே சூர்யாவும் அந்த முயற்சிக்குக் கைகொடுக்க, 'சிங்கம் 2' தியேட்டர்களில் உருமிக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட்டில் கூட இம்மாதிரி சீக்குவல் படங்கள் எப்போதுமே முதல் பாகம் அளவுக்கு வெற்றியைத் தொட்டதில்லை. இங்கும் 'சிங்கம் 2'ல் என்னதான் சொல்லிவிட முடியும் என்று மென்றுகொண்டிருந்த வெறும் வாய்களில் சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளுடன் காரப்புகையிலையையும் சேர்த்து அடைத்துவிட்டது சூர்யா - ஹரி காம்போ.
இந்த பாகத்தில் உள்ளூர் குற்றங்களுடன் தொடர்புடைய உலகக் குற்றங்களை வேட்டையாட சிங்கத்தை தயாராக்கி விட்டார் ஹரி. ஆமாம்... தூத்துக்குடியிலிருந்து டேக் ஆஃப் ஆகும் கதை தென்னாப்பிரிக்க 'டர்பன்' வரை 'ஆபரேஷன் டி"யாகப் பாய்கிறது. ("நாடு விட்டு நாடு... கண்டம் விட்டு கண்டம் பாயுற ஏவுகணைடா நான்..." - சூர்யா பேசும் வசனத்துக்கு லாஜிக்..?)
மீண்டும் (துரை) சிங்கமாக சூர்யா..! ஒண்ணரை டன் வெயிட்டு ஏற்கனவே காட்டிவிட்டதால் அதைவிட வெயிட் ஏற்றி இருக்கிறார் தன் ஆக்ரோஷத்தில். கோபம் வந்து ஒரு தட்டு தட்டினால் மேஜையும், கார் பேனட்டும் குலுங்குவதைக் காமெடியாக்காமல் நியாயப்படுத்துவது கண்டிப்பாக சூர்யாவின் கனல் தெறிக்கும் பார்வையும், நரம்பு தெறிக்கும் நடிப்பும்தான்..!
சமூகக் குற்றங்களுக்குத் துணை போனதோடு அநீதியாக தனக்கும் 'சஸ்பென்ஷன் ஆர்டர்' தரும் தன் உயர் அதிகாரியை அதே இடத்தில் வைத்து அவர் செய்த அநீதிகளைப் பட்டியல் போடும் துணிச்சல் 'யாருக்கும் பயப்படாமல் எதையும் தட்டிக் கேட்கக் கூடியவர்...' என்று சூர்யா மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
அதனாலேயே குதிரை கணக்காக அனுஷ்கா, குல்ஃபி கணக்காக ஹன்சிகா என்று இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் சூர்யாவுக்குக் காதலிக்க நேரமில்லை. பாடல்கள் மட்டும் அவர் ரொமான்ஸுக்கு ஆறுதல். (ஒரு பாடலில் நெல்லுக்குதிர் கணக்காக 'அஞ்சலி' வேறு ஐட்டம் நம்பர் போடுகிறார்...)
காதலிகளுக்குப் போட்டியாக காமெடியன்களும் விவேக், சந்தானம் என்று ரெட்டைச் சர வெடிகள். அவர்களும் கூட ஒட்டுமொத்த ஆக்க்ஷன் படத்தில் தங்களுக்கு இட ஒதுக்கீடு குறைவுதான் என்று புரிந்து கொண்டு சைக்கிள் டயர் கேப் கிடைத்தால் டிரக்கை உள்ளே நுழைக்கப் போராடி இருக்கிறார்கள்.
சூர்யா மீதான ஹன்சிகாவின் ஒருதலைக் காதலை அனுஷ்காவிடம் மறைக்க முயன்று மாறாக போட்டுக்கொடுத்து விடும் விவேக்கும், குத்த வைத்து வாழைக்காய் சீவுபவனைப் பார்த்து "வாழக்காயைப் பார்த்து சீவு. சேத்து வச்சு சீவிடப்போறே..!" என்று சந்தானமும் அவரவர்கள் ரூட்டில் சிரிப்புகளை வசூல் செய்கிறார்கள்.
வழக்கமான ஹரி படமாகவே நாசர், ராதாரவி, விஜயகுமார், ரகுமான், கே.விஸ்வநாத் என்று நிறைய பாத்திரங்கள் படம் முழுவதும் நிரம்பி வழிந்தாலும், பாத்திரம் வழியும் அளவுக்கு அவர்களுக்குக் காட்சிகள் தரப்படவில்லை. எல்லா இலாகாவையும் சிங்கமே சிங்கிளாக லீசுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.
அந்த ஹாலிவுட் வில்லன் டேனி சபானி.... அடேங்கப்பா வில்லன். ஆள் சும்மா பார்த்தாலே கைக்குழந்தைகள் 'சுச்சூ' போய்விடும் சாத்தியம் இருக்கிறது. அவரையே சூர்யா அடித்து ஆப்பிரிக்காவிலிருந்து இழுத்து வருவது மகா மிரட்டல்..! ஆப்பிரிக்க போலீஸே வியக்கும் 'இன்டியன் போலீஸ் ஸ்டைல்', ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.
இனி ஒரு போலீஸ் படம் எடுக்க முடியுமா என்கிற அளவில் தன் முடி அளவுக்கு மூளையையும் கலைத்துப்போட்டு காட்சிகளைப் பிடித்திருக்கிறார் இயக்குனர் ஹரி. டேனி சபானி கைது செய்யப்படும் வினாடியிலிருந்து அடுத்தடுத்து தாதாக்களின் பதற்றமும் அதன் விளைவாக உயர் மட்டங்களில் ஏற்படும் பரபரப்பும், செல்லில் இருந்து டேனி சபானி விடுவிக்கப்படுவரை... அந்த எபிசோட் 'த்ரில்'லை எகிற வைக்கிறது.