Sunday, 3 August 2014

சரபம் சினிமா விமர்சனம்

சுலபமாகப் பணம் சம்பாதிக்க வழியில்லாத சில பல ஆண்டுகளுக்கு முன்னால் குறுக்கு புத்திசாலிகள் ‘சுலபமாகப் பணம் சம்பாதிப்பது எப்படி..?’ என்று புத்தகம் போட்டு ‘பைசா’ பார்த்து வந்தார்கள். இப்போது சுலபமாகப் பணம் சம்பாதிக்க ஏகப்பட்ட வழிகளை சினிமாக்களே சொல்லித்தர ஆரம்பித்து விட்டன.
‘கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை தேட்டை போடுவது எப்படி..?’, ‘பேய்க்கதை சொல்லி பல கோடி மதிப்புள்ள வைரத்தை ஆட்டையைப் போடுவது எப்படி..?’, ‘வங்கிப் பணத்தை வெளியே கொண்டு வந்து டபுளாக்குவது எப்படி..?’, ‘இன்சூரன்ஸ் பணத்தை நிறுவனத்தின் கண்ணில் மண்ணைப் போட்டு சுருட்டுவது எப்படி..?’, ‘மல்டி லெவெல் மார்க்கெட்டிங்’, ‘மண்ணுளிப்பாம்பு சீட்டிங்’ என்று பத்தில் நான்கு படங்கள் இப்படி ஊரார் பணத்தை சுருட்டச் சொல்லித் தருகின்றன.
அந்த வரிசையில் சுபலமாகப் பணம் பண்ணும் ஒரு ஜோடியின் கதை இது. ஆனால், இதில் பொதுமக்களையோ, வங்கியையோ ஏமாற்றாமல்… ஆனால், அப்படி ஏமாற்றி சேர்த்த சொத்தை, ஹீரோவும், ஹீரோயினும் ஏமாற்றி அபகரிக்கிறார்கள். அந்த வகையில் திருப்தி அடையலாம். ஆனால், ஏமாற்றி சேர்த்த சொத்தை ஏமாற்றி அடையலாம் என்று இ.பி.கோவில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதா என்ன..?
ஆனால், இந்த நியாய தர்மங்களைத் துக்கிப் போட்டு விட்டு த்ரில்லாக ஒரு படம் பார்க்கும் அனுபவத்தைத் தர முயற்சித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் அருண் மோகன்.
மாட்டிக் கொள்ளாமல் ‘துட்டு’ கிடைக்கும் என்றால், எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராக இருக்கும் நாயகன் நவீன் சந்திரா ஒரு ஆர்க்கிடெக்ட். தன்னை அவமானப்படுத்திய தொழிலதிபர் நரேனைப் பழிவாங்க ‘குவாட்டர்’ வழி கூடக் கிடைக்காமல் குமைந்து ‘ஃபுல்’ அடித்துக் கொண்டிருக்கிறார்.
மட்டன் கடைக்குக் கிளம்பும் நேரத்தில் மஜீத் பாய் வீட்டு ரம்ஜான் பிரியாணி வீட்டுக்கே பார்சல் வந்தது போல் அந்த நேரம் பார்த்து நரேனின் மகள் சலோனி அப்பாவுக்குத் தெரியாமல் அந்தா பெரிய வீட்டிலிருந்து ‘எஸ்’ ஆக, அவரைச் சந்திக்கும் நவீனிடம் அடைக்கலம் கேட்கிறார்.
செலவுக்குப் பணம் தராத அப்பாவைப் பழிவாங்கும் மூடில் ‘சலோனி’யும் இருக்க… அவர் ஐடியாப்படியே ஒரு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். நினைத்தபடியே எல்லாம் நடந்து 30 கோடி கைக்கு வந்துசேர… சலோனியைத் திட்டமிட்டபடியே அவர் அப்பாவிடம் நவீன் அனுப்ப… டிவி சேனலில் சலோனி கொல்லப்பட்ட செய்தி வருகிறது – இடைவேளை..!
sarabham படம் ஆரம்பித்து கிட்டத்தட்ட நாற்பது நிமிடம் என்னதான் கதை சொல்லப்போகிறார்கள் என்றே தெரியாமல் நகத்தைக் கடித்து விரல் புண்ணான நமக்கு அந்த ‘சூது கவ்வும்’ கடத்தல் டிராமா சுமாரான சுவாரஸ்யத்தை மட்டுமே தர, இன்டெர்வல் ‘ட்விஸ்ட்’ மட்டுமே முதுகெலும்பை நிமிர்த்துகிறது.
அதற்குப்பின் பார்த்தால் நவீனின் வீட்டு காலிங் பெல் அடிக்க… போய்த் திறந்தால் சலோனி உயிருடன் நிற்கிறார் – கூடவே அவர் அப்பா நரேனும்..! ‘அடடா… அடடா…’ என்று நிமிர்ந்தே உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தால்… அது இவர் இல்லை… இதுவரை சொல்லப்பட்ட கதையில் உண்மை இல்லை… என்று வேறு ஒரு கதை சொல்கிறார்கள்.
படம் முடியும் நேரத்தில் இன்னொரு ட்விஸ்ட் போட்டு அதுவும் அவர் இல்லை… அதுவரை சொல்லப்பட்ட கதையிலும் உண்மை இல்லை… என்று இன்னொரு கதை சொல்லி முடிக்கிறார்கள். கதையை மாற்றிக் கொண்டே இருப்பதில் ஒரு கட்டத்தில் “அட போங்கப்பா…” என்றாகி விடுகிறது...

இருக்கு ஆனா இல்ல சினிமா விமர்சனம்

என்ன இருக்கு? என்ன இல்ல..? எல்லாம் ஒன்றேதான். அது ஆவி. அமானுஷ்ய ஆவிக்கும், திட மனுஷனுக்கும் இடையில் ‘ஒரு காதலும் இருக்கு… ஆனா இல்ல…’ என்றும் கொள்ளலாம்.
விபத்து ஒன்றில் தன் கண்முன்னாலேயே இறக்கும் பெண்ணைப் பார்த்துவிட்டு வரும் கதாநாயகன் அந்தப் பெண்ணை வீட்டிலும் பார்க்கிறான் – ஆவியாக. அல்லோலகல்லோலப்பட்டு அந்த இரவைக் கழித்தால், மீண்டும் மீண்டும் அதே ஆவி, இரவு மட்டுமல்லாமல் பகலிலும் வருகிறது.
ஒருகட்டத்தில் பயமுறுத்துவதை நிறுத்திவிட்டு அந்த ஆவி, ஹீரோவிடம் தான் வந்த விஷயத்தை ஓப்பன் செய்கிறது. அதன்படி, ‘தான் யார்..?’ என்று கண்டுபிடித்துத் தரச் சொல்கிறது. அதுவரை ஒழுங்கற்றுக் கிடந்த ஹீரோவின் வாழ்வை ஒழுங்குபடுத்திக் கொடுக்கிறது. இதனால் ஹீரோவுக்கும் ஆவி மீது ஒரு காதல் அரும்புகிறது. ஆவியால் ஸ்மார்ட்டாக மாறிவிட்ட ஹீரோவை அலுவலகத்தில் இன்னொரு பெண்ணும் ‘லவ்’வ ஆரம்பிக்கிறாள்.
அந்தக் காதல்கள் என்ன ஆகிறது என்பதைத் தாண்டி மனித உறுப்புகளைத் திருடி விற்கும் அபாய மருத்துவமனைகள் பற்றியும் ‘அலர்ட்’ செய்கிறார் இயக்குநர் கே.எம்.சரவணன்.
Irukku aana Illa‘விவந்த்’ ஹீரோவாக, ‘ஈடன்’ ஹீரோயினாகிறார். வழக்கமாக ஆவி என்றால் ‘அகோர’ மேக்கப்தான் போட வேண்டும் என்ற லாஜிக்கை மாற்றி ஆவியை அட்டகாச மேக்கப்பில் இயக்குநர் காட்டியிருப்பதால் ‘ஈடன் தோட்டத்து ஆப்பிள்’ போலவே இருக்கிறார் ஆவியாக வரும் ஈடனும்.
அதனால், ஆவியை யாராவது காதலிப்பார்களா என்று யாரும் கேள்வி கேட்க முடியாமலும் செய்திருக்கிறார். நமக்கே ஒரு கட்டத்தில் ஈடனைக் காதலிக்கத் தோன்றுகிறது. (என்ன ஒன்று … ஒரே காஸ்ட்யூமில் வருவதில் மட்டும் சின்ன அலுப்பு…)
இயக்குநர் எந்தக் கடிவாளமும் போடாததால் விவந்த் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஆவி மாற்றத்தால் ஸ்மார்ட் ஆக ஆனதும் அவரைப் பார்க்கலாம் போலிருக்கிறது. அவரது நண்பனாக வரும் ஆதவன் நகைச்சுவைக்காம். அவர் வராமல் இருந்தாலே படத்தை ரசிக்க முடிகிறது.
படமெல்லாம் நிரம்பி இருப்பது ‘ஆவி’ ஈடன்தான். மறைந்த ஸ்ரீவித்யாவின் ஆவியோ என்று நினைக்க வைக்கும் கண்கள் ஈடனுக்கு. ஒரு சாயலில் ஸ்ரீவித்யாவின் இளவயதை ஒத்திருக்கிறார். இன்னும் மெலிந்தால் த்ரிஷா சாயலுக்கு வரலாம் ஈடன். மருத்துவமனையில் கோமாவிலிருக்கும் அவரது சகோதரியாக ஈடனுக்கு இன்னொரு வேடமும் இருக்கிறது படத்தில். அது ஏன் என்பது ‘கிளைமாக்ஸ்’ சுவாரஸ்யம்.


மருத்துவராக வரும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு மேக்கப் போட்டவருக்கு தண்டனையாக ஒருவாரம் அந்த ஒய்.ஜி.மகேந்திரன் கெட்டப் போட்டோவுடன் மட்டும் தனியறையில் அடைத்து வைக்கலாம். அவ்வளவு கொடுமை..! உறுப்புகளைத் திருடும் மருத்துவமனையின் டாக்டர் ஒருவர், தங்கள் மருத்துவமனையில் அட்மிட் ஆகும் ஒய்.ஜி.எம்மை “ஃப்ரெஷ் பீஸ்…” என்று அழைப்பது அதைவிடக் கொடுமை..! (உன் கிட்னியைக் காக்காய் தூக்கிட்டுப் போக…)

வேலையில்லா பட்டதாரி – சினிமா விமர்சனம்

வேலைக்குப் போகாமல் ‘தண்டச்சோறாக’ அப்பாவிடம் அர்ச்சனை வாங்கும் படங்கள் ஆறேழில் தனுஷ் நடித்திருக்கிறார் என்றாலும், தன் 25வது படமான இதில் அவர் ஏற்றிருக்கும் அதே வேடம் கொஞ்சம் பிரத்யேகமானது.
இந்நாட்டு இளைஞர்களின் முக்கியமான பிரச்சினை ஒன்றைத் தொட்டு அவரை நடிக்க வைத்திருப்பதில் கவனம் பெறுகிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ்.
பொதுவாக ‘எஞ்சினீயரிங்’ படிப்பே இனி வேலைக்கு ஆகுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள நிலையில், குறிப்பாக ‘சிவில் எஞ்சினீயரிங்’ (கட்டடப் பொறியியல்) படித்த லட்சோபலட்சம் இளைஞர்களின் எதிர்காலம்..?
அப்படி ஒரு பற்றியெரியும் பிரச்சினையைத் தொட்டிருப்பதற்காகவே இயக்குநருக்கு ‘சபாஷ்’ போடலாம். அந்த வகையில் இந்த ‘தண்டச்சோறு’ ஸ்பெஷல் மணம், குணம், சுவையுடன் சூடாகப் பரிமாறப் பட்டிருக்கிறது. அதனுடன் இரண்டு பிள்ளைகள் இருக்கக்கூடிய நடுத்தரவர்க்கக் குடும்பத்துக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையும் சரிவிகித ‘சைட் டிஷ்’ ஆக சேர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.
அதேபோல் இன்னொரு சுவாரஸ்யம், தனுஷின் ரசிக்கத்தக்க சினிமா அப்பாக்களான (மலையாள) முரளி, ரகுவரன் வரிசையில் இதில் சமுத்திரக்கனி.
வேலையில்லாத மகனைக் கரித்துக் கொட்டுவதையே பிரதான வேலையாகக் கொண்டிருக்கும் அவர், பக்கத்து வீட்டில் விழுந்த பந்தை எடுத்துக் கொண்டு வரும் தனுஷைப் பார்த்து, “இதே மாதிரிதான் பதினாறு வயசிலயும், பக்கத்து வீட்ல இருந்து பந்தோட வந்தே… அப்பவாவது உன்னோட விளையாட பத்துப் பசங்க இருந்தாங்க. இப்ப அவங்களும் வேலைக்குப் போயிட்டாங்க. நீ மட்டும் இப்ப தனியா விளையாண்டுகிட்டு இருக்கே..?!” என்பது நடுத்தர வீடுகளில் அன்றாடம் கேட்கப்படும் ‘தேசிய சோகம்..!’
அத்தனைத் திட்டுகளையும் தாண்டி, மகன் மேல் உள்ளுற வைத்திருக்கும் ஊமைப் பாசத்தில் ‘ஆழ’ சமுத்திரமாகிறார் அசத்தல் கனி..!
CS 17_07தனுஷைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. பக்கத்து வீட்டுப் பையனின் சாயலையும் தாண்டி நம் வீட்டுப்பையன் போலவே அத்தனை இயல்பு. வேலைக்குப் போகும் தம்பியைக் காட்டி அப்பா திட்டுவதை ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், “அவனை மட்டும் பெரிய ஸ்கூல்ல படிக்க வச்சுட்டு என்னை சாதாரண ஸ்கூல்ல படிக்க வச்சீங்களே..? நாலு வார்த்தை இங்கிலீஷ்ல பேச எவ்வளவு கஷ்டப்படறேன் தெரியுமா..?” என்று அவர் பொங்குவதன் நியாயம் புரிந்து ரசிக்கலாம்.
கூடவே, “அவனுக்கு ‘கார்த்திக்’ன்னு ஹீரோ பெயர். எனக்கு ‘ரகுவரன்’னு வில்லன் பெயர்..!” என்று அவர் பொருமுவதையும் ரசித்துச் சிரிக்கலாம். அம்மாவிடம் துடைப்பத்தில் அடிவாங்குவதிலாகட்டும், தம்பியை ‘டிராப்’ பண்ணிவிட்டு இருபது ரூபாய் கூலி வாங்கிக் கொள்வதிலாகட்டும்...


சதுரங்க வேட்டை சினிமா விமர்சனம்

“இந்த சமுதாயம் எனக்கு என்ன செய்ததோ அதையே அந்த சமுதாயத்துக்கு நான் திருப்பிச் செய்கிறேன்…” என்கிற அடாவடி ஹீரோவை “அன்பைக் கொடு… அதையே திரும்பப் பெறுவாய்…” என்கிற ஹீரோயின் மாற்றும் கதை.
இதை இந்த அளவுக்கு சீரியஸாகச் சொல்லாமல் ‘பஜார்ல உஜாரா இல்லேன்னா நிஜாரை அவுத்துருவானுங்க…’ என்ற அளவில் நிஜத்துக்கு நெருக்கமாக ஒரு மெசேஜையும் வைத்து இயல்பாகச் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் எச்.வினோத்.
‘இளிச்சவாயன்கள் இருக்கும் ஊரில் ‘இடிச்சபுளி செல்வராஜ்’ கூட நாட்டாமைதான்’ என்கிற அளவில் ஊரில் என்னென்ன எத்துவாளித்தனங்கள் நடக்கின்றனவோ அவற்றை மொத்தமாகக் கொள்முதல் செய்து காசு பார்க்கும் ஹீரோவைப் பற்றிய கதை.
‘மண்ணுளிப்பாம்பு’ தொடங்கி ‘எம் எல் எம்’, ‘ஈமு கோழி’, ‘தங்க நகை ஆஃபர்’, மற்றும் ‘ரைஸ் புல்லிங்’ வரை ஏமாறும் மக்களுக்கு ஆப்பு வைக்கும் பாத்திரத்தில் வருகிறார் ஹீரோ ‘நட்டி’ என்கிற நட்ராஜ் சுப்ரமணியம்.
அன்றாடம் இப்படி ஏதோ ஒரு அவலம் நம்மைக் கடந்து போய்க்கொண்டிருக்க, அவற்றின் காரணகர்த்தாவாக வரும் நட்டி, நமக்கு நன்றாக அறிமுகமானவரைப் போல் படம் ஆரம்பித்த பத்து நிமிடத்தில் ‘அண்டப்புளுகு ஐடி கார்டு’ காட்டி நம்மருகே வந்து உட்கார்ந்து கொள்கிறார். ‘கேப்பையில் நெய்யுடன் சேர்த்து ஆலிவ் ஆயிலும் வழிகிறது…’ என்று அவர் சொன்னால் அதை நாம் நம்பியே ஆக வேண்டும் போல் அவ்வளவு சொல்சுத்தம்.
“கத்தியில்லாம ரத்தம் பாக்காம, காசு பாக்க பல வழிகள் இருக்கு… அதுல நான் ஒண்ணை உங்களுக்குச் சொல்லித்தரேன்…” என்று ஆரம்பித்து ஒரு குற்றத்துக்குத் திட்டம் தீட்டுவதிலும், “என் ப்ளான் என்னன்னு உனக்குப் புரிஞ்சுதா..?” என்று ஒரு மொக்கை ரவுடியிடம் கேட்டு அவன் “இல்லை…” என்று சொன்னதும் “உனக்கே புரிஞ்சுடுச்சுன்னா வேற ப்ளான் யோசிக்கலாம்னுதான்…” என்று அதைத் தீட்டிக் கூர் பார்ப்பதிலுமாக நட்டி, ‘சம்திங் நாட்டி.’ [அவரது பாத்திரப் பெயர் 'காந்தி பாபு' (!)]
Sathuranga Vettai‘பலநாள் திருடன்…’ பழமொழியாக ஒருநாள் பொறி வைத்துப் பிடிக்கிற போலீஸிடமும் அசராமல் அவர், “ஏமாறனும்னு வர்ர மக்களுக்கு நான் ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன் சார்…” என்று சர்வ அலட்சியமாகச் சொல்வதில் தொடங்கி, போலீஸின் அத்தனை ‘கவனிப்புகளை’யும் கடந்து கோர்ட்டிலிருந்து விடுதலை ஆகும்போது ‘கெத்து நடை’ காட்டுவது வரை நட்டியின் கம்பீரம் அபாரம்..!
ஏமாற்றுவதையே மூச்சாகக் கொண்ட நட்டியையே “நீங்க ரொம்ப நல்லவர் ஸார்…” என்று நேர்மறையாகப் பார்த்து ஒருதலையாய்க் காதல் கொள்ளும் இஷாரா படத்தின் நாயகி என்பதைத் தாண்டி இன்னொரு ஹீரோவாகவே தெரிகிறார். காரணம், படத்தின் அடிநாதம் இஷாரா மேலேயே ஏற்றப்பட்டிருக்கிறது.
ஊர் ஊராகத் துரத்தித் துரத்தி அடித்து உதைக்கப்பட்டு ரத்தச் சகதியில் இருக்கும் தனக்கு சிகிச்சை அளிக்கும் இஷாராவிடம், “என் மேல உனக்குக் கோபமே இல்லையா..?” என்று நட்டி கேட்க, “உங்க அம்மா உயிரைக் காப்பாத்த யாராவது பணம் கொடுத்திருந்தா நீங்க இப்படியெல்லாம் தப்பு பண்ணியிருக்க மாட்டீங்க இல்ல..?” என்று பதில் சொல்லி அவருக்குள்ளும் இருந்து புனிதனை மீட்டெடுக்கும் இஷாரா, இளவயது தெரசா..!
மண்ணுளிப்பாம்புக்கு ‘இளைய தளபதி விஜய்’ என்று நட்டி வைக்கும் பெயரில் மகிழ்ந்து, சத்தம் கேட்டால் பாம்புக்கு ஒத்துக்கொள்ளாது என்று கார் ஸ்டீரியோவைக்கூட பாய்ந்து ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யும் அப்பாவிச் செட்டியாராக இளவரசு வருவது கொஞ்ச நேரமே ஆனாலும்…



Sunday, 13 July 2014

பப்பாளி சினிமா விமர்சனம்

தலைப்பில் எந்த சங்கதியும் இல்லை. ‘லோ பட்ஜெட் படம்’ என்பதைத்தான் இப்படி ‘லோ பட்ஜெட் பழத்தை’ வைத்துச் சொல்லியிருப்பாரோ இயக்குநர் கோவிந்த மூர்த்தி…?
டெல்லியில் ஆரம்பிக்கும் படத்தில் நாயகன் செந்தில், நம்மிடம் கதை சொல்ல ஆரம்பிக்க, சென்னையில் விரிகிறது பிளாஷ்பேக். தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தும் இளவரசுவின் மகன்தான் செந்தில். அப்பாவுக்கு ‘விருதுநகர் பவன்’ என்ற பெயரில் பல கிளைகளுள்ள ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டுமென்பது கனவு.
அதற்காக, மகனிடம் படிப்பைத் தூக்கி எறிந்துவிட்டு தன் டிபன் கடையை முன்னேற்ற உதவி செய்யச் சொல்கிறார். ஆனால், செந்திலோ ஓயாமல் படித்துக்கொண்டே இருக்கிறார். அப்படி என்ன படிக்கிறார் என்கிறீர்களா..? அதையும் சொல்லிவிட்டால் இன்டெர்வல் பாய்ண்டில் சுவாரஸ்யத்துக்கு வேறு விஷயங்களில்லை என்பதால் அதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் சீரியஸ் விஷயமும் அதுதான் என்பதால் ‘எங்கே செல்லும் இந்த பாதை..?’ என்று இலக்கில்லாமல் நகர்கிறது முன்பாதிப்படம். நண்பன் ஜெகனுடன் சேர்ந்து பெண்கள் பின்னால் அலைவதைவிட வேறொன்றும் செய்யவில்லை செந்தில்.
காதல்…காதல்… என்று இருவரும் அலையும் முன்பாதியில் செந்தில் விருப்பப்படியே ‘தோல் சீவிய பப்பாளி’ போல ஹீரோயின் இஷாரா அறிமுகமாகிறார். அவர் ஓட்டி வரும் ‘டிவிஎஸ் 50′ சாலையில் தடுமாறி விழ, அவர் வாங்கி வரும் பப்பாளிப்பழமும் கீழே விழுகிறது. (இதுதான் தலைப்புக்குப் படத்தில் இருக்கும் ஒரே சம்பந்தம்)
பிறகு… இருவரும் அலுக்க அலுக்க இன்டெர்வல் வரும்வரை காதலிக்கிறார்கள்… காதலிக்கிறார்கள்… காதலி…க்க்கி…றார்…கொர்…கொர்…கள். இஷாராவின் அம்மா சரண்யா பொன்வண்ணனும், அப்பா நரேனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால் மகளின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்ட… புதிதாய் முளைக்கிறது பிரச்சினை, செந்திலுக்கு இருக்கும் லட்சியம் தொடர்பாக. அதுவரை அவர் என்ன படிக்கிறார் என்கிற ரகசியமும் அதன்மூலம் உடைகிறது – அவர் ஐ.ஏ.எஸ் ஆக விரும்புகிறார்.
ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி பிரச்சினையாக முடியும் என்று அப்பாவியாகக் கேட்காதீர்கள். அதை வைத்துதான் அடுத்த பாதிப்படத்தை ஓட்ட இயக்குநர் நினைத்திருந்ததால்… அது பிரச்சினைதான். தலையைச் சுற்றிக் காதைக் கடந்து மூக்கைத் தொட்டு ஒரு பிரச்சினையை இன்டர்வெல்லில் சொல்கிறார் இயக்குநர்.
நாம் ‘ரெஸ்ட் ரூம்’ போய் வந்ததும், அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று அடுத்தடுத்த காட்சிகளில் விளக்கி, காதலர்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்து விடுகிறார்கள் சரண்யா – நரேன் தம்பதி. அப்புறம் என்னய்யா பிரச்சினை என்கிறீர்களா..?
pappaliபடிக்கும் உங்களுக்கே இந்தக் கடுப்பு வந்தால் பார்த்த எங்களுக்கு..? பின்பாதிக் கதைக்கான பிரச்சினையை இளவரசு கையிலெடுத்துக் கொள்கிறார். தன் ஹோட்டல் கனவைப் பாழ் பண்ணிய மகனை வீட்டை விட்டுத் துரத்தி, அவன் ஐ.ஏ.எஸ் ஆகக் கூடாதென்று மனதார மண்தூற்றி தினமும் வந்து சாபம் விட்டுக் கொண்டே இருக்கிறார். அந்த வெறியில் மகன் படித்து ஐ.ஏ.எஸ் ஆக, விடு ஜூட்..!
படம் முடிந்ததும், ‘மருமகனை ஐ.ஏ.எஸ். ஆக்கிய மாமியாரின் கதை இது…’ என்கிற ஒன்லைன் ஒருமாதிரி புரிந்துவிடுகிறது. அது சத்தியமாகத் தமிழில் இதுவரை வராத கதைதான்.
தன்னால் என்ன முடியும் என்பதை செந்திலும், அவரால் என்ன முடியும் என்பதை இயக்குநரும் புரிந்து வைத்திருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் செந்தில் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னால் ஐ.ஏ.எஸ்.ஆக முடியாது என்று மனைவி, மாமியாரிடம் அவர் உடைந்து அழும் இடம் நெகிழ வைக்கிறது.
ஒட்டு ‘மொத்த’ப் பார்வைக்கு விளைந்த ‘பப்பாளி’ போலிருக்கும் இஷாரா, குளோசப்பில் காண்பித்தால், ‘ப்ப்ப்ப்பா..!’ என்றிருக்கிறார். அதென்னமோ தெரியவில்லை, செந்தில், இஷாரா, காமெடியன் ஜெகன் என்று ஒவ்வொருவருக்கும் குளோஸ் அப்களாக வைத்துத் தள்ளி பயமுறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்.
வழக்கமாக ஹீரோவின் அம்மாவாக வந்து அவன் காதலுக்கு உதவும் சரண்யா பொன்வண்ணன் இதில் மாறி ஹீரோயினின் அம்மாவாக வந்து அதேபோல் காதலுக்கு உதவி செய்கிறார். சற்றே அலுக்க வைக்கும் பாத்திரப்படைப்பு என்றாலும் சரண்யா போனில் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!
எந்த அப்பா தன் மகன் கலெக்டர் ஆவதை விரும்ப மாட்டார்..? ஆனால், ‘உன்னைப் படிக்க விட்டேனா பார்…’ என்று இளவரசு செய்யும் அலம்பல்களுக்கு முகாந்திரம் இல்லாததால் அவர் நடிப்பு ‘ஓவர் லோட்…’ ஆகிப் போகிறது..!



ராமானுஜன் சினிமா விமர்சனம்

வாழும் காலத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்திய கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜுனை இந்திய சினிமாவும் காலம் காலமாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்தக் குறையைத் தீர்க்கக் களமிறங்கி வெற்றியும் கண்டிருக்கிறார் தமிழ்த்திரையுலகம் மெச்சக் கூடிய இயக்குநர் ஞானராஜசேகரன்.
ராமானுஜன் பிறந்த கும்பகோணத்தில் தொடங்கி, சென்னை ‘போர்ட் ட்ரஸ்ட்’ தொடர்ந்து லண்டன் ‘கேம்பிரிட்ஜ்’ வரை பயணப்பட்ட அந்த மகா மேதையின் வாழ்க்கை வரலாற்றை ஒரு உலக முயற்சியாக செல்லுலாய்டில் சித்திரித்திருக்கிறார் இயக்குநர்.
கணித உலகில் பூஜ்ஜியத்தின் பெருமையைத் தன் ஆறாவது வயதிலேயே கேள்வியாகக் கேட்டு ஆசிரியரைத் திக்குமுக்காடவிட்ட ராமானுஜன், அந்த ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே கோவிலில் வினியோகிக்கும் கொழுக்கட்டை, சுண்டல் எத்தனை பேருக்குக் கிடைக்கும் – கிடைக்காது என்று கணக்கிடுவதில் தொடங்கி, கல்லூரி மாணவர்களுக்கு ‘ட்ரிகனாமெட்ரி’யை டியூஷன் எடுத்தது வரை ரசிக்கத்தக்க வகையில் சொல்லியிருக்கிறார்.
உடற்பயிற்சி ஆசிரியர் ‘தேகாப்பியாசம்’ (உடற்பயிற்சி) செய்ய அழைக்கும்போது, “இல்லை… சார்… நான் எண்களுடனேயே தொடர்ந்து அப்பியாசம் செய்து வருகிறேன்… அதுவே போதும்…” என்று சொல்லி விலகும் அந்தக் குண்டுக் குழந்தை ராமனுஜனைக் கொஞ்சலாம் போல் அத்தனை ஆழமான மென்மை.
வளர்ந்த ராமானுஜனாக ‘அபிநய் வாடி’. அறிமுகக் காட்சியிலேயே தன் தோற்றத்தில் தாத்தா ஜெமினி கணேசனை நினைவு படுத்துகிறார். நடிப்பிலும் பாட்டி சாவித்ரியைத் தொட முயல்வது தெரிகிறது. கணிதத்தில் மூழ்கிவிட்டால் காலம் நேரம் போவது தெரியாமல் அதிலேயே கிடப்பதும், மனைவியின் அருகாமையில் மட்டும் காதலில் திளைப்பதுமாக ஒரு மேதையாகவே வாழ்ந்திருக்கிறார் அபிநய்.
இன்றைக்கு ‘சாயாஜி ஷின்டே’ வில்லனாக நடித்துக் கொண்டிருந்தாலும், ‘மகாகவி பாரதி’யின் சலனப்பதிவுக்கு அவர் உருவம்தான் நம் கண்முன் வந்து நிற்கிறது.
அதைப்போலவே ராமானுஜனின் உருவம் என்றால் இனி காலத்துக்கும் நம் நினைவில் வரப்போவது அபிநய்யின் உருவம் மட்டுமே. அந்த வகையில் ஒரு நடிகனாக, அழியாப்புகழ் தேடிக்கொண்டுவிட்டார் அபிநய். அதற்கு அவர் காலமெல்லாம் ஞானராஜசேகரனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சதா சர்வ காலமும் எண்களுடன் வாழும் நிலையில், உடல் நோயும் சேர்ந்து கொள்ள எப்போதும் ஒரு அலுப்புடனேயே தெரியும் அவரை வழக்கமான கதாநாயகர்களுடன் ஒப்பிடாமல், வாழ்ந்த சரித்திர நாயகனாகப் புரிந்துகொண்டால் அந்தப் பாத்திரத்துடன் ஒன்ற முடியும்.
தனக்கு இருந்த ஒரே ஆறுதலான மனைவியையும் பிரிந்து லண்டனில் தனிமைப்படும் அவரது சோகம் விவரிக்க முடியாதது. இப்போது இருப்பதைப்போல மொபைல் போனில் உலகெங்கும் பேசும் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், கடிதம் ஒன்றே ஒற்றைத் தொடர்புச் சாதனமாக கப்பல் வழியாக மட்டுமே சென்று சேர்ந்து கொண்டிருக்க, அப்படி மனைவிக்கு அவர் எழுதிய மிகச்சில கடிதங்களையும் அவரது அம்மா (சுஹாசினி) மனைவியின் கண்ணில் படாமல் மறைத்துவிடுவது ஆனாலும்… துயரம்..!
ramanujanஅந்த வகையில் ராமானுஜனின் வில்லியான அம்மாவாக சுஹாசினி. மகனின் மேல் அம்மாவுக்கு இருக்கும் பாசத்தை விட, மாமியாராக மருமகள் மேல் இருக்கும் துவேஷமே பெரிதாக இருக்கும் வேடத்தில் சுஹாசினி நன்றாகவே நடித்து, வெறுக்க வைத்திருக்கிறார். சொல்லப்போனால் இதுவரை அவரது நடிப்புப் பயணத்தில் அவர் ஏற்காத வேடம் இது.
ராமானுஜனுக்கு அல்ப ஆயுள் என்பதை சோதிடர் மூலம் அறிந்துகொண்டதால்தான் அப்படி மனைவியை அவரிடமிருந்து விலக்கி வைக்கிறார் என்று ஓரளவுக்கு அவர் பாத்திரத்தை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ராமானுஜனின் வாழ்வில் நடந்ததா இல்லை சுஹாசினிக்காக அந்த வில்லத்தனத்தை அவர் நியாயப்படுத்துகிறாரா என்பது இயக்குநருக்கான கேள்வி.
ராமனுஜனின் வாழ்வில் கணிதத்துக்கு அடுத்து சின்ன மகிழ்வைத் தந்த மனைவியின் பாத்திரத்தில் பாமா. அப்பாவியான அந்த முகம் அப்படியே அந்தப் பாத்திரத்துடன் ஒன்றிப்போகிறது.
ராமானுஜனின் தந்தையாக நிழல்கள் ரவி, தேகாப்பியாச ஆசிரியராக தலைவாசல் விஜய், கலெக்டராக சரத்பாபு, அவரது உதவியாளராக மனோபாலா என்று எண்ணற்ற நடிகர்கள் அங்கங்கே வந்து போகும் பாத்திரங்களில் வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.
“ஒரு ‘ஹார்டி’ மட்டும் இல்லேன்னா நானும் இப்படித்தானே இந்த மண்ணுல திரிஞ்சுக்கிட்டிருப்பேன்..?” என்று மனநிலை பாதிக்கப்பட்டு தெருவில் அலையும் தலைவாசல் விஜய்யைக் காட்டி அபிநய் சொல்லும் காட்சி உள்ளத்தை உலுக்குகிறது. அந்த அளவுக்கு ராமானுஜனின் நிஜ வாழ்க்கையில் அவரை அடையாளம் கண்டு, லண்டனுக்கு அழைத்து அவரை உலகின் கவனத்துக்குக் கொண்டு சென்ற ‘கேம்பிரிட்ஜ்’ பேராசிரியர் ஹார்டிக்கு கும்பகோணத்தில் கோவில் எழுப்பினாலும் குற்றமில்லை. அந்த வேடத்தில் நடித்திருக்கும் நடிகரைக் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது.
இந்தியாவைத் தங்கள் வசப்படுத்த, இந்தியர்களின் கல்வியறிவை முடமாக்கி, அறிவியலில் பல ஆண்டுகள் பின்தங்கச் செய்த ஆங்கிலேயர்களில் ஒருவரான ஹார்டிதான் அகல்விளக்காக இருந்த ராமானுஜனை...

Monday, 8 July 2013

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

Singam-2"ஓங்கி அடிச்சா ஒண்ணரை டன் வெயிட்டு..." என்று 'சிங்கம்' முதல் பாகத்தில் சூர்யா 'பஞ்ச்' வைத்தபோது யாரும் எடை மிஷினைத் தூக்கிக் கொண்டு வந்து அது சரிதானா என்றெல்லாம் பார்க்காமல் அந்த வீரியத்தை ரசிக்கவே செய்தார்கள்.
singam2-movie-reviewஅந்த வெற்றி தந்த தைரியமே இயக்குனர் ஹரியை சிங்கம் படத்தின் சீக்குவலைத் தயார் செய்ய வைத்திருக்கிறது. ஹரியின் HURRY யான திரைக்கதை மற்றும் இயக்கத்தின் மேலுள்ள நம்பிக்கை காரணமாகவே சூர்யாவும் அந்த முயற்சிக்குக் கைகொடுக்க, 'சிங்கம் 2' தியேட்டர்களில் உருமிக் கொண்டிருக்கிறது.
ஹாலிவுட்டில் கூட இம்மாதிரி சீக்குவல் படங்கள் எப்போதுமே முதல் பாகம் அளவுக்கு வெற்றியைத் தொட்டதில்லை. இங்கும் 'சிங்கம் 2'ல் என்னதான் சொல்லிவிட முடியும் என்று  மென்றுகொண்டிருந்த வெறும் வாய்களில் சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளுடன் காரப்புகையிலையையும் சேர்த்து அடைத்துவிட்டது சூர்யா - ஹரி காம்போ.
இந்த பாகத்தில் உள்ளூர் குற்றங்களுடன் தொடர்புடைய உலகக் குற்றங்களை வேட்டையாட சிங்கத்தை தயாராக்கி விட்டார் ஹரி. ஆமாம்... தூத்துக்குடியிலிருந்து டேக் ஆஃப் ஆகும் கதை தென்னாப்பிரிக்க 'டர்பன்' வரை 'ஆபரேஷன் டி"யாகப் பாய்கிறது. ("நாடு விட்டு நாடு... கண்டம் விட்டு கண்டம் பாயுற ஏவுகணைடா நான்..." - சூர்யா பேசும் வசனத்துக்கு லாஜிக்..?)
மீண்டும் (துரை) சிங்கமாக சூர்யா..! ஒண்ணரை டன் வெயிட்டு ஏற்கனவே காட்டிவிட்டதால் அதைவிட வெயிட் ஏற்றி இருக்கிறார் தன் ஆக்ரோஷத்தில். கோபம் வந்து ஒரு தட்டு தட்டினால் மேஜையும், கார் பேனட்டும் குலுங்குவதைக் காமெடியாக்காமல் நியாயப்படுத்துவது கண்டிப்பாக சூர்யாவின் கனல் தெறிக்கும் பார்வையும், நரம்பு தெறிக்கும் நடிப்பும்தான்..!
சமூகக் குற்றங்களுக்குத் துணை போனதோடு அநீதியாக தனக்கும் 'சஸ்பென்ஷன் ஆர்டர்' தரும் தன் உயர் அதிகாரியை அதே இடத்தில் வைத்து அவர் செய்த அநீதிகளைப் பட்டியல் போடும் துணிச்சல் 'யாருக்கும் பயப்படாமல் எதையும் தட்டிக் கேட்கக் கூடியவர்...' என்று சூர்யா மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
அதனாலேயே குதிரை கணக்காக அனுஷ்கா, குல்ஃபி கணக்காக ஹன்சிகா என்று இரண்டு ஹீரோயின்கள் இருந்தும் சூர்யாவுக்குக் காதலிக்க நேரமில்லை. பாடல்கள் மட்டும் அவர் ரொமான்ஸுக்கு ஆறுதல். (ஒரு பாடலில் நெல்லுக்குதிர் கணக்காக 'அஞ்சலி' வேறு ஐட்டம் நம்பர் போடுகிறார்...)
காதலிகளுக்குப் போட்டியாக காமெடியன்களும் விவேக், சந்தானம் என்று ரெட்டைச் சர வெடிகள். அவர்களும் கூட ஒட்டுமொத்த ஆக்க்ஷன் படத்தில் தங்களுக்கு இட ஒதுக்கீடு குறைவுதான் என்று புரிந்து கொண்டு சைக்கிள் டயர் கேப் கிடைத்தால் டிரக்கை உள்ளே நுழைக்கப் போராடி இருக்கிறார்கள்.
singam-2சூர்யா மீதான ஹன்சிகாவின் ஒருதலைக் காதலை அனுஷ்காவிடம் மறைக்க முயன்று மாறாக போட்டுக்கொடுத்து விடும் விவேக்கும், குத்த வைத்து வாழைக்காய் சீவுபவனைப் பார்த்து "வாழக்காயைப் பார்த்து சீவு. சேத்து வச்சு சீவிடப்போறே..!" என்று சந்தானமும் அவரவர்கள் ரூட்டில் சிரிப்புகளை வசூல் செய்கிறார்கள்.
வழக்கமான ஹரி படமாகவே நாசர், ராதாரவி, விஜயகுமார், ரகுமான், கே.விஸ்வநாத் என்று நிறைய பாத்திரங்கள் படம் முழுவதும் நிரம்பி வழிந்தாலும், பாத்திரம் வழியும் அளவுக்கு அவர்களுக்குக் காட்சிகள் தரப்படவில்லை. எல்லா இலாகாவையும் சிங்கமே சிங்கிளாக லீசுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது.
அந்த ஹாலிவுட் வில்லன் டேனி சபானி.... அடேங்கப்பா வில்லன். ஆள் சும்மா பார்த்தாலே கைக்குழந்தைகள் 'சுச்சூ' போய்விடும் சாத்தியம் இருக்கிறது. அவரையே சூர்யா அடித்து ஆப்பிரிக்காவிலிருந்து இழுத்து வருவது மகா மிரட்டல்..! ஆப்பிரிக்க போலீஸே வியக்கும் 'இன்டியன் போலீஸ் ஸ்டைல்', ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.
இனி ஒரு போலீஸ் படம் எடுக்க முடியுமா என்கிற அளவில் தன் முடி அளவுக்கு மூளையையும் கலைத்துப்போட்டு காட்சிகளைப் பிடித்திருக்கிறார் இயக்குனர் ஹரி. டேனி சபானி கைது செய்யப்படும் வினாடியிலிருந்து அடுத்தடுத்து தாதாக்களின் பதற்றமும் அதன் விளைவாக உயர் மட்டங்களில் ஏற்படும் பரபரப்பும், செல்லில் இருந்து டேனி சபானி விடுவிக்கப்படுவரை... அந்த எபிசோட் 'த்ரில்'லை எகிற வைக்கிறது.