நாட்டுக்குத் தேவையான நல்ல செய்தி சொல்லியிருக்கும் படம். இன்றைய மருத்துவத்தின் இன்றியமையாத தேவையான உறுப்பு தானத்தை வலியுறுத்தியிருக்கும் கதாசிரியர்கள் பாபி - சஞ்சய்க்கும், இயக்குனர் 'ஷஹித் காதரு'க்கும் வந்தனங்கள்.
சென்னை சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெயப்ரகாஷ் - லஷ்மி ராமகிருஷ்ணன் தம்பதியின் மகன் சச்சினின் இதயத்தை எடுத்து வேலூரில் மாற்று இதயம் வேண்டி மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும் பிரபல ஹீரோ பிரகாஷ்ராஜ் - ராதிகா தம்பதியின் மகளுக்குப் பொருத்த வேண்டியிருக்கிறது.
அதற்கு மாபெரும் சவாலாக இருப்பது 'டிராஃபிக்'. ஒன்றரை மணிநேரத்தில் ஏறக்குறைய 125 கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணப்பட்டு இதயம் கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும் என்ற நிலையில் அதை எப்படி சாதிக்கிறார்கள் என்பதை ஒரு த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இது கற்பனைக் கதையல்ல - நிஜமான சம்பவத்தின் நகல் எனும்போது இன்னும் சுவாரஸ்யம் குறையாமல் பார்க்க முடிகிறது.
படத்தின் பின்பாதி காரின் வேகத்துடன் பயணப்படுகிறது என்பதால் முன்பாதியில் மூளைச்சாவு அடைந்த சச்சின் முக்கிய சேனலில் வேலைக்குச் சேர்வது, அவனுக்கும் அப்பா, அம்மாவுக்கும் இருக்கும் பிணக்கு, இணக்கம் மற்றும் நட்பு, காதல் போன்ற நிலைகள் - ஹீரோ பிரகாஷ்ராஜின் வல்லமை, குடும்பத்துக்கே 'கால்ஷீட்' கொடுக்க வேண்டிய அவரது நேரப்பற்றாக்குறை - குடும்ப சூழ்நிலைக்காக 'கைநீட்டி' விடும் கறை படிந்த டிராஃபிக் போலீஸ் சேரன், அந்த அவமானத்தால் அவர் தங்கையின் உறவில் ஏற்படும் விரிசல் என்று அனைத்துப் பாத்திரங்களின் நிலைகளையும் மென்மையாக விவரிக்கிறார் இயக்குனர்.
எல்லா பாத்திரங்களையும் ஒரு கோட்டில் இணைக்கிறது சம்பவ தினமான 'செப்டம்பர் 16'. இதயம் கொண்டு செல்லப்படும் காரை சேரன் ஓட்ட, இதய மருத்துவர் பிரசன்னா, சச்சினின் நண்பன் மித்துன் உடன் பயணிக்கிறார்கள்.
தன் மகனின் இதயத்தைத் தர தந்தை மறுப்பது கேட்டு "என் மகள்ன்னு தெரிஞ்சுமா கொடுக்க மாட்டேங்கிறான்..? மினிஸ்டருக்குப் போனைப் போடு..." என்கிற அகந்தையில் ஆரம்பித்து, "சினிமாவில நீங்க ஜெயிச்சிருக்கலாம். ஆனா வாழ்க்கையில தோத்துட்டீங்க..." என்று மனைவியிடம் வாங்கிக் கட்டி தலைகுனிவது வரை பிரகாஷ்ராஜ் பிரகாசிக்கிறார்.
(அந்த நேரம் அவர் ஜன்னலில் தெரியும் தன் போஸ்டரைப் பார்க்க அதில் 'BORN TO WIN' என்று அச்சிட்டிருப்பது இயக்குனரின் நக்கல்)

அவரது மனைவியாக வரும் ராதிகா சரத்குமார் இதைவிடப் பிரமாதமான பாத்திரங்களையெல்லாம் கடந்தவர் என்பதால் நடிகை என்பதைவிட படத்தின் தயாரிப்பாளராகப் பெருமை பெறுகிறார்.
சிறுத்த உருவமுள்ள சேரனுக்கு போலீஸ்காரர் வேடம் கொடுத்திருப்பது அந்தப் பாத்திரத்தை அவரால் சுமக்க முடியும் என்கிற நம்பிக்கையால் மட்டும்தான் என்று புரிகிறது. அதை அவரும் ஆர்ப்பாட்டமில்லாமல் சுமந்திருக்கிறார்.
டிராபிக் கமிஷனராக சரத்குமார் அறிமுகம் ஆக, பரபரப்பெடுக்கிறது திரைக்கதை. அந்தப் பாத்திரத்துக்கு தோற்றம், நடிப்பு இரண்டிலும் 'சரத்' ரொம்பப் 'பொருத்'.
பாராட்ட இத்தனை அம்சங்கள் இருந்தும் படத்தில் குறைகளும் இல்லாமலில்லை. திடீர் வில்லனாகும் பிரசன்னாவின் பாத்திரம் உண்மைக்கதையில் பரபரப்புக்காக செருகப்பட்ட கற்பனை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தன் மனைவி துரோகம் செய்துவிட்டாள் என்பதற்காக அவளைக் காரில் ஏற்றிக் கொல்லும் அளவுக்குப் போவதும், போலீஸில் மாட்டாதிருக்க தன் கடமையையும் மறந்து இன்னொரு கொலைக்குத் துணிவதும் உயிர் காக்கும் ஒரு 'கார்டியாக் சர்ஜன்' செய்கிற வேலையாகத் தெரியவில்லை.
சேரனுடன் உதவிக்கு இன்னொரு போலீஸையோ மாற்று டிரைவரையோ அனுப்பாமல் அவரே போனை அட்டென்ட் பண்ணிக்கொண்டு அவரே காரையும் ஓட்டிக்கொண்டு... பரிதாபம். ஓயாமல் அவரிடம் பேசிக்கொண்டே இருக்கும் சரத் வேறு, டாக்டர் பிரசன்னா ஒரு கொலையாளி என்பதை சம்பந்தமே இல்லாமல் சொல்லி அவர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறார்.
'பூ' பார்வதி ஏற்கனவே முத்தலாகத் தெரிய அந்த தோசைக்கல் கண்ணாடியையும் மாட்டி காதலன் சச்சினுக்கு அக்கா போல ஆக்கிவிடுகிறார்கள்.
நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பது ஒரு சினிமா ஹீரோவின் தவறா..? அந்தக் கேரக்டரை ரொம்பவே போட்டுப் பார்க்கிறார்கள். அவர் நடிப்பதை விட்டுவிட்டால் அவர் மனைவி சந்தோஷப்படுவாரா..?

அதேபோல் ஒரு அப்பாவாக ஒரே மகனின் இறப்பு ஜெயப்பிரகாஷை நிலைகுலையச் செய்யலாம். ஆனால், ஒரு மருத்துவராக, மூளைச்சாவு அடைந்த மனிதனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வழியேயில்லை என்பதைப் புரிந்து கொள்ள மறுப்பதில் லாஜிக் இல்லை.
ஆனால் ஜெயப்பிரகாஷும், லஷ்மி ராமகிருஷ்ணனும் வழியில் காரை நிறுத்தி தங்கள் மகனைப் பறிகொடுத்த சோகத்தைப் பகிர்ந்துகொள்ள, பின்னணியில் அவர்களது மகனின் இதயம் போலீஸ் காரில் விரைவதைக் காட்டும் 'ஷாட்' அற்புதமானது. வெல்டன் டைரக்டர்..!
ஷேகநாத் ஜே.ஜலாலின் துல்லிய ஒளிப்பதிவும், 'அஜயன் பாலா'வின் தெள்ளிய வசனங்களும் படத்தின் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. ரிலீசாகவிருக்கும் தன் படம் பற்றிக் கேட்கும் ஹீரோ பிரகாஷ்ராஜிடம் "கிளைமாக்ஸ் சூப்பர்ன்னு சொல்றாங்க சார்..." என்று மேனேஜர் சொல்ல, "அப்ப கிளைமாக்ஸை மட்டும் ரிலீஸ் பண்ணுவாங்களா என்ன..?" என்று பிரகாஷ்ராஜ் கிண்டலடிப்பது 'அஜயன் பாலா'வின் 'நயம் சரக்கு..!'
படம் நிறைவு பெறும் தருவாயில் படம் முழுதும் பயணப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 'கிளாப்ஸை' திடீர் விருந்தாளியாகி வசூலித்துக் கொண்டு போக வருகிறார் சூர்யா. அவர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இது போன்ற சமுதாயச் செய்தி சொல்லும் படங்களில் முக்கிய கேரக்டரே ஏற்கலாம்.
அங்கங்கே குறைகள் இருந்தாலும் நிறைவான படம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதயம் தேவைப்படும் சிறுமி ஒரு வி.ஐ.பியின் மகளாக இல்லாமல், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு ஏழையாக இருந்திருந்தால் இத்தனை சிரத்தை எடுத்திருப்பார்களா என்கிற கேள்வியும் எழாமலில்லை.
- வேணுஜி
No comments:
Post a Comment