Tuesday, 30 April 2013

ஹரிதாஸ் - சினிமா விமர்சனம்


haridas
பெருமையுடன் குறிப்பிடத் தகுந்த தமிழ்ப்படங்களின் இந்தியப்பட்டியலில் இந்தப் படத்தையும் குறித்துக் கொள்ளலாம்.
மனித மனசாட்சியை இருவேறு நிலைகளுக்குக் கடத்தும் கதையை சமூகப் பொறுப்புடனும், ரசனை குன்றாத கலை வடிவமாகவும் சொல்ல முயன்றிருக்கும் இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலனுக்கும், அதனை சமன் செய்துகொள்ளாத நேர்த்தியுடன் தயாரிக்க ஒத்துக்கொண்ட தயாரிப்பாளர் டாக்டர் ராமதாசுக்கும் வந்தனங்களை முதலில் சொல்லியே ஆக வேண்டும்.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக வரும் கிஷோர்தான் கதை நாயகன். படத் துவக்கத்திலேயே பிரபல ரவுடியின் கூட்டாளியாக இருப்பவனை சுட்டுக்கொன்று, தப்பிப்போன ரவுடியைக் கொல்லும் தோட்டா தன்னிடம்தான் இருக்கிறது என்று கமிஷனரிடம் விரைப்பாகச் சொல்லும் மிடுக்கில் கவர்கிறார்.
அந்த விரைப்பைக் கரைக்கிறது அம்மா ஊரில் இறந்துபோனதாக வரும் செய்தி. இறந்துபோன அம்மாவிடம் வளரும் கிஷோரின் பத்து வயது மகன் வடிவில் வருகிறது இன்னொரு சவால்.
பிரசவத்துக்குப்பின் மனைவி இறந்து போயிருக்க, இயல்பான மன வளத்தில் இல்லாத 'ஆட்டிஸம்' என்கிற பாதிப்பிலிருக்கிறான் அவரது மகன். 'தனியாக சிந்தித்து வாழத் திறன் இயலாத' அவனைத் தேற்றி எடுத்து இயல்பான வாழ்க்கையில் வெற்றிக்கோட்டைத் தொட கிஷோர் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் கதை..!
அம்மா இறந்த செய்தியை சின்ன அதிர்வுடன் எதிர்கொள்ளும் நடிப்பில் மில்லி மீட்டர் எகிறாமல் மின்னும் கிஷோர், தன் மிடுக்கும், ஆற்றலும் மகனின் நலத்தில் கரைந்துபோய், மாநகராட்சிப் பள்ளியில் அவனுடன் அமர்ந்து ஆரம்பப் பாடத்தை எதிர்கொள்ளும் வேளையில் சாமானியனாக குறுகித் தெரிகிறார்.
மகன் காணாமல் போய்விட்ட செய்தியை அழுது கொண்டே சொல்லும் நாயகி சினேகாவிடம் தன் தவிப்பை மறைத்தபடி, "அழாம சொல்லுங்க...!" என்று அதட்டலாக கட்டளையிடும்போது பண்பட்ட அதிகாரியாகவும் மிளிர்கிறார். மகனின் பிரச்சினை புரியாமல் போலீஸை அழைக்கவிருப்பதாக எகிறும் கடைக்காரரிடம் "நானே போலீஸ்காரந்தாண்டா..!" என்று சீறுமிடத்தில் பின்னி எடுத்திருக்கிறார்.
haridas
அவருக்கு இணையாக வாய்ப்பும், அதை ஈடு செய்யும் விதத்தில் நடிப்பென்றே தெரியாத நிஜமுமாக வந்திருக்கிறார் சினேகா. மாணவர்களுக்கிடையில் ஒரு முரட்டு மனிதனாக கிஷோர் அமர்ந்திருக்க, அவரை வைத்துக்கொண்டு இயல்பாகப் பாடம் எடுக்க முடியாமல் திணறுவதில் ஆகட்டும், அவருடைய பரிதவிப்பையும், பையனின் நிலையையும் கருத்தில் கொண்டு, அவனுக்கு அம்மாவாக வாழ முடிவெடுக்கும் உறுதியிலும் 'வாழ்ந்தே பார்த்திருக்கிறார்' சினேகா.
பையனின் நிமித்தம் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்லும் கிஷோரின் மீது ஏற்கனவே கோபத்திலிருக்கும் அம்மாவிடம் அவரைத் திருமணம் செய்யும் முடிவைச் சொல்ல, அந்த நேரம் பார்த்து கிஷோரிடமிருந்து போன் கால் வருகிறது.
கிஷோரை நாலு வார்த்தை திட்ட அம்மா பாய்ந்து அந்த செல்போனை எடுக்க முயல, உனக்கு அந்த சிரமமே வேண்டாம் என்பது போலவும், எப்படியும் நல்ல மனம் கொண்ட கிஷோர் தன்னைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்க மாட்டார் என்றும் உறுதியாக நம்பும் நோக்கிலும் சினேகா, அந்த போனின் ஸ்பீக்கரை 'ஆன்' செய்கிறார்.
அதில் எதிர்பார்த்தது போலவே சினேகாவின் முடிவை கிஷோர் மறுப்பதுடன் அவர் அம்மாவின் சூழ்நிலையையும் நியாயப்படுத்த, அம்மா வாயடைத்து நிற்பதும், "நீயே உன் காதால் கேட்டாயல்லவா..? இப்போதாவது அந்த மனினைப் புரிந்து கொள்..." என்பதையும், தன் விரக்தியையும் ஒன்றுசேர்த்து சினேகா பார்க்கும் அந்த 'மையப்பார்வை...' நூறு விருதுகளுக்கு சமம்.
கிஷோருக்கும், சினேகாவுக்கும் ஈடாக, நடிப்பென்றே தெரியாத அந்த பத்து வயது சிறுவன் 'உண்மையிலேயே அவன் அப்படித்தானா..?' என்கிற அளவில் பாத்திரமாகவே மாறிப் போயிருக்கிறான்.
இப்படியே படம் முழுமையும் சிலாகித்துச் சொல்ல ஏகப்பட்ட காட்சிகள் நிறைந்திருப்பது குமரவேலனின் இயக்கத் திறமைக்குச் சான்று. கிஷோரின் போலீஸ் சகாக்களில் வில்லனிடம் மாட்டிக்கொள்பவர் மற்றும் அவரது பெற்றோரின் பாத்திரங்கள் நினைவில் நின்று நெகிழ வைக்கின்றன.
கிஷோரின் டிரைவராக வரும் பரோட்டா சூரி காமெடிக்கும், குணச்சித்திரத்துக்கும் பயன்பட்டிருக்கிறார். முக்கிய பாத்திரங்கள் தவிர்த்து கிஷோரின் சித்தப்பா, பையனின் பிரச்சினையை விளக்கும் டாக்டர் யூகிசேது, ஓட்டப்பந்தய பயிற்சியாளர் ராஜ்கபூர் என்று சின்னச் சின்னக் கேரக்டர்களை ஏற்றிருப்பவர்களும் பரிமளித்திருப்பது இயக்குனரின் திறமை மட்டுமே.
haridas
ஒரு கட்டத்தில் வில்லன் கையில் கிஷோரின் மகனும் சிக்குவான் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்திக்கொண்டே போய், அந்த சினிமாத்தனத்தை தவிர்த்திருப்பதும் தேர்ந்த இயக்க உத்தி.
வெற்றியின் சின்னமான குதிரையை போராட்ட வாழ்வின் வெற்றிக்கான குறியீடாகவும் ஆக்கியிருக்கும் சிந்தனை 'பலே..!'
துருத்தாத... ஆனால் பொருள் பொதிந்த வெங்கடேஷின் நறுக்கு வசனங்கள் படத்தின் பலம். டாக்டர் பேச வேண்டியதை பயிற்சியாளரும், பயிற்சியாளர் பேச வேண்டியதை டாக்டரும் பேசுவதும், அதையும் டாக்டரே புரிந்து சொல்லும் இடமும் 'கைத்தட்ட' வைக்கும்.
படத்தின் உயிர் ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. பிரமாண்ட 'எந்திரன்' ஒளிப்பதிவாளர் இந்தச் சின்னப் படத்துக்கும் ஒத்துக்கொண்டது ஸ்கிரிப்டின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது புரிகிறது. அவர் திறமையில் இந்தியத் திறன் உலகத் திறனுடன் போட்டியிடுகிறது.
இசையமைப்பாளர் விஜய் ஆன்டனியின் பின்னணி இசையும் படத்தின் பண்பட்ட நேர்த்தியில் தன்னை இணைத்துக் கொள்கிறது.வாய்ப்புகள் இருந்தும் தைரியமாக 'சினிமா க்ளிஷே'க்களைத் தவிர்த்திருக்கும் படத்தில் ஒட்டாமலிருக்கும் அந்த போலீஸ் கானாவைத் தவிர்த்திருந்தாலும் தவறில்லை.
தமிழிலும் ஒரு 'தாரே ஜமீன் பர்' தரும் இயக்குநர் இருக்கிறார் என்ற நம்பிக்கையைத் தருகிறது படம். "ஆனால் அதை உலகுக்கு உரத்துச் சொல்ல ஒரு 'ஆமிர்கான்' இங்கிருக்கிறாரா..?" என்பதுதான் 'கேட்க வேண்டிய' கேள்வி.
- வேணுஜி

'வத்திக்குச்சி' சினிமா விமர்சனம்


vathikuchiஏ.ஆர்.முருகதாஸுக்கு இந்தி 'துப்பாக்கி' வேலைகள் மற்றும் அடுத்த விஜய் பட ஆயத்தங்கள் என்று பல நெருக்கடிகள் இருந்ததால், 'வத்திக்குச்சி' படக்கதை என்ன, திரைக்கதை என்ன என்று தெரிந்து கொள்ளாமலேயே விட்டுவிட்டார் போலிருக்கிறது. ஹாலிவுட்டின் 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸு'டன் இணைந்து அவரே தன் தம்பி திலீபனை ஹீரோவாக்கி தயாரித்திருக்கும் படம் இது.
ஹீரோ, ஷேர் ஆட்டோ டிரைவர். ஹீரோயின், இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் படிக்கும் பொண்ணு. 'சமத்துவபுர'க் குடியிருப்பில் இருக்கும் இருவரும் காதலிக்கிறார்கள்...' என்கிற ஒன்லைனையும் ஒரே ஒரு ஆக்க்ஷன் சீனும் கேட்டுவிட்டு, அனேகமாக 'ஓகே' சொல்லியிருக்கக் கூடும் ஏ.ஆர்.முருகு.
அந்த சீன் - ஜன சந்தடி மிக்க தெருவில் தன் அப்பாவின் ஏ.டி.எம் கார்டை வைத்து பணம் எடுத்து வருகிறார் ஹீரோ - தன் தங்கை பிறந்த நாளில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு வைக்கும் ட்ரீட்டுக்காக. அந்தப் பணத்தை கழுத்தில் கத்தி வைத்து பிடுங்கிக் கொண்டு போகிறார் பிரபல தாதா சம்பத். அவரைத் தட்டிக் கேட்கக் கூட முடியாமல் சிட்டியே மிரள்கிறது.
அப்படிப்பட்ட ரவுடி வீட்டைத் தேடிக் கண்டுபிடுத்துப் போய் தன்னிடம் பிடுங்கிய பணத்தைக் கேட்கிறார் ஹீரோ. அவரை அடித்துத் துவைத்துக் கடாசுகிறார்கள். அதோடு போய்விடுவார் என்று பார்த்தால் ஜிம்முக்குப் போய் எக்சர்சைஸெல்லாம் செய்து மீண்டும் வந்து அடியாட்களை துவம்சம் செய்து, தன் பணத்தை மீட்பதுடன் சம்பத்தையும் தூக்கிப் போட்டு மிதிக்கிறார் ஹீரோ. அத்துடன் சம்பத் சாம்ராஜ்யம் சரிகிறது.
இது போதாதா..? முருகதாஸின் மனக்கண்களில் தன் தம்பி திலீபன் ஒரு ஆக்க்ஷன் ஹீரோவாக ஆகிவிட்டதாகவே தெரிந்திருக்க வேண்டும். அவருக்கு மட்டுமல்ல. மேற்படி விஷயங்களைக் கேட்கும் எல்லோருக்குமே அப்படித்தான் தோன்றும். ஆனால் அதற்கெல்லாம் நியாயமும், வலுவும், சேர்க்கக் கூடிய அறுபது, எழுபது காட்சிகளை அழகாக எழுதியாக வேண்டுமே..?
'நன்றாக சாப்பிட வேண்டும். ஜிம்முக்குப் போய் எக்சர்சைஸ் செய்து உடம்பை ஏற்ற வேண்டும். அப்போதுதான் யாரையும் அடிக்க முடியும்..!' என்பதுதான் சுற்றி சுற்றி வந்து படம் முழுக்க டைரக்டர் 'கின்ஸ்லின் சொல்லும் செய்தி.
ஆரம்பிக்கும் எந்தக் காட்சியையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் நீட்டிக்கொண்.........டே போகிறார். 'ஹீரோவைக் கொல்ல நினைக்கிறார் ஒருவர்...' அல்லது 'யாரோ யாரையோ கொல்ல நினைக்கிறார்கள்...' என்று ஒரு மேட்டரைப் பிடிக்கிறார். எப்படிக் கொல்ல நினைக்கிறார்கள் என்று எட்டு சீன். அதற்கு எப்படித் தயாராகிறார்கள் என்று ஒரு எட்டு சீன். ஏன் கொல்ல நினைக்கிறார்கள் என்று எட்டு சீன். எப்படி ஹீரோ தப்புகிறார் அல்லது அதைத் தடுக்கிறார் என்று அடுத்த எட்டு சீன். 'போதும்டா சாமி' என்று ஆகிவிடுகிறது.
கிளைமாக்ஸில் வில்லன்கள் ஒரு நாள் முழுக்க ஹீரோவை 'வைத்திருந்து' கொல்ல நினைக்கிறார்கள். ஹீரோவை வைத்துக் கொண்டு எங்கெங்கோ அலைந்து ஒரு மலை உச்சிக்குக் கூட்டி செல்கிறார்கள். ஒரு அஸிஸ்டன்ட் டைரக்டராவது 'ஏன்?' என்று கேட்டிருக்க வேண்டாமா..?
vathikuchi
அந்த நீண்ட நெடிய பயணத்தில் இரண்டு இடங்களில் ஹீரோ 'எஸ்' ஸாகிறார். ஆனால், மீண்டும் பிடிபடுகிறார். அந்த இரண்டு வேளைகளிலும் அவர் என்ன செய்தார் என்று கடைசியில் சொல்கிறார்கள்.
ஒரு சீனில் டயர்டாக இருப்பதால் நன்றாகத் தூங்கி ஓய்வெடுக்கிறாராம். இன்னொரு 'எஸ்'ஸில் ஓடுகிற ஓட்டத்தில் ஒரு கடையில் பிரியாணி வாங்கிச் சாப்பிட்டு விட்டு மைதானத்தில் அவசர அவசரமாக கொஞ்சம் எக்சர்சைஸ் செய்கிறாராம்.
அடுத்த படம் கிடைத்து 'கின்ஸ்லின்' ஆக்க்ஷன் கதையே சொல்ல ஆசைப்பட்டால் உண்மையான சண்டைக்காரன் கதை ஏதாவது கேட்டுத் தெரிந்து கொண்டாவது ஸ்கிரிப்ட் எழுதுவது நலம்.
முருகதாஸின் தம்பியாக ஆகிவிட்டதால் ஈஸியாக 'என்ட்ரி பாஸ்' வாங்கி ஹீரோவாகி விட்டார் திலீபன். அடிக்கும் காட்சிகளில் ஓகே. நடிக்கும் காட்சிகளைப் பற்றி டைரக்டரே அவரை சிரமப்பட விடவில்லை.
படத்தின் ஆறுதலாக 'கொழுக், மொழுக்' அஞ்சலி. வாயாடிக் கொண்டும் "நீ என்னைக் காதலிக்கிறேன்னா காதலிச்சுக்கோ... ஆனா நான் உன்னைக் காதலிக்க மாட்டேன்..." என்று பிகு பண்ணுகிற அழகை ரசிக்கலாம். ஆனால், காதலில் ஆழம் இல்லாமலும், பேசுவதையே சதா பேசிக் கொண்டும் இருப்பதால் ஒரு கட்டத்தில் அஞ்சலியையும் ரசிக்க முடியாமல் போகிறது.
சம்பத், ரவி மரியா, ஜெயப்பிரகாஷ், பட்டிமன்றம் ராஜா, ஸ்ரீரஞ்சனி எல்லோரும் பல படங்களில் செய்ததையே திரும்பவும் செய்திருக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவின் ஒளிப்பதிவு இயல்பாக இருக்கிறது. பெரிதும் நம்பிக்கை வைத்து ஏமாற்றிய இன்னொருவர் இசையமைப்பாளர் ஜிப்ரான். 'குறு குறு...' ஒரு பாடல் மட்டும் ஓகே..!
நிறைய நம்பி ஏமாந்தது நாம் மட்டுமல்ல... 'ஹாலிவுட்' டில் அப்பாடக்கர் டைரக்டர்களுக்கே ஸ்கிரிப்ட் சரியாக இருந்தால்தான் சான்ஸ் கொடுப்பார்கள் என்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸு' ம்தான்..!
ஆனாலும் என்ன, 'பெரி...ய்ய்ய்ய்...ய...' பேனர் என்பதால் 'படம் அமோக வெற்றி' என்பார்கள். 'சக்சஸ் மீட்' வைப்பார்கள். 'படம் இந்திக்குப் போகிறது. அக்க்ஷய் குமார் ஹீரோவாகிறார்...' என்பார்கள் - அவர்களால் அது முடியும்.
-வேணுஜி

பரதேசி - சினிமா விமர்சனம்


paradesi
பரதேசி வழக்கமான படமல்ல... வழக்கமான பாலாவின் படமும் அல்ல... இதுவரை வந்த பாலாவின் படங்கள் மனித மனவியலின் அடிப்படையில் அமைந்த புனைவுக் கதைகளைத் தாங்கி வந்தன. செய்தியை நேரடியாக உணர்த்துவதாகவும் இருந்தன.
அவர் இப்போதுதான் ஒரு படம் ஆற்ற வேண்டிய சமூகக் கடமையை முன்வைத்து ஒரு முழுமையான படம் எடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். 'நான் கடவுள்' படமும் சமூகத்தைப் பிரதிபலித்து எடுக்கப்பட்டிருந்தாலும் அதன் கிளைமாக்ஸில் படத்தின் சாரம், பிரச்சாரமாக இருந்தது நெருடியது.
'பரதேசி'யில் வரலாற்று நிகழ்வுகளைக் கதையாக அமைத்துக் கொண்டிருக்கும் பாலா, பார்வையாளனை சிந்திக்க வைத்துப் படத்தை முடித்திருக்கிறார். இதுவரை தன் படங்களில் பாலா என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தது போக, இம்முறை பாலாவின் படம் என்ன சொல்கிறது என்று பார்க்க நேர்ந்திருப்பது ஆரோக்கியமான முன்னேற்றம்.
வெள்ளைக்காரன் ஆட்சியில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய ஆட்கள் வேண்டி தென் மாவட்டங்களிலிருந்து 'கால்நடை' யாக அழைத்துச் செல்லப்பட்டு 'கால் நடைகளை' விடக் கேவலமாக நடத்தப்பட்ட பரதேசிகளின் கதை இது.
முன்பாதி வறண்ட செங்காத்து பூமியின் வளமான மனித வாழ்க்கை: பின்பாதியில் பச்சைப் பசேலென்ற பூமியில் அமைந்த அதே மனிதர்களின் வறண்ட வாழ்க்கை - இதுதான் 'பரதேசி'.
'நாயமா....ரே.....' (நியாயமானவர்களே...!) என்று பறை தட்டிக்கொண்டு வரும் அதர்வாவின் வெள்ளந்திப் பாத்திரம் அவருக்கு ஆகப் பொருத்தம். எடுப்பது கௌரவப் பிச்சை என்றாலும் தன்னை ராஜாவாகக் கருதிக்கொண்டு "இல்லேன்னா சொல்லு...ராஜா வண்டியைத் திருப்பிடுவேன்..." என்று 'பிகு' பண்ணுவதும், நாள் முழுக்க ஊருக்கு உழைத்தாலும் ஒரு வாய் சோறு பெறக்கூட அருகதை இல்லாத ஆற்றாமையைத் தனியே அமர்ந்து பறை தட்டிப் போக்கிக் கொள்ளும் கொந்தளிப்பும் அதர்வாவின் கலைப்பயணத்தில் ஒரு மகுடம்.
அவரை சீண்டிப் பார்த்தே சுகம் காணும் 'அங்கம்மா' வாக வேதிகா. தான் நடித்த படத்தைத் தானே பார்க்க முடியுமா அவரால் என்று தெரியவில்லை. அந்த வெள்ளைப் பெண்னை அநியாயத்துக்கு கறுப்பியாக்கி அலைய விட்டிருக்கிறார் பாலா. இப்படி நடிக்க ஒத்துக்கொண்ட வேதிகாவின் மனத்துணிவுக்கு 'வெல்டன்' சொல்லலாம்.
paradesi
இயல்பாக மேலே பட்ட அதர்வாவின் கைகளில் ஆண் சுகமறிந்து பொய்யாக கண்டிப்பு காட்டி பின் அவனிடம் தன்னை இழக்கும் அந்தச் சின்னக் காட்சி காதலின் சின்னம். பஞ்சாயத்து வரை தங்கள் காதல் வந்து விட்ட நிலையிலும் அதே குறும்புடன் அதர்வாவைத் தன் கோலிகுண்டுக் கண்களால் மிரட்டி, சத்தியம் செய்யாதே என்று அதட்டும் அழகும், கை வைத்தவன் பஞ்சம் பிழைக்கப்போய்விட, வயிற்றில் வளரும் குழந்தையுடன் வழி மீது விழி வைத்துப் பார்த்திருக்கும் பரிதவிப்பும் அருமை.
இரண்டாவது பாதியில் மட்டுமே வந்தாலும், தன்ஷிகா மனதில் நிற்கிறார். கட்டியவன் ஓடிவிட இன்னொருவனைத் தன் நிழலில் கூட அனுமதிக்காத கண்டிப்பு இருந்தாலும் அதர்வாவின் அப்பாவித்தனம் அறிந்து அவர் வலிகளில் ஒரு தாயாக அரவணைப்பது நெகிழ வைக்கிறது.
(ஜேடி) ஜெர்ரியா அது..? வெள்ளைக்காரன் தயவில் உண்டு கொழுத்த கங்காணியாக மிரட்டி விடுகிறார். அதற்கும் சேர்த்து வெள்ளைக்காரனிடம் அடிவாங்கி பொய்யாகப் பணிந்து தன் இருப்பை நிறுத்திக் கொள்வதும் இயலாமை கொண்ட சுயநலம். அதர்வாவின் பாட்டியாக வரும் 'கச்சம்மாள்' என்கிற ஒரு மூதாட்டி இந்த மண்ணின் அடையாள 'மாதா..!'
உதய் கார்த்திக், ரித்விகா என்று புதிய முகங்களும் முக்கியப்பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். தானே படித்து டாக்டரான மோகனும், டாக்டர் பரிசுத்தமாக வரும் சிவசங்கரும் ரசிக்க வைக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவின் விசுவாசியான சிவசங்கர், "என் அப்பா (இயேசு) குணமாக்குவார்..." என்று சொல்ல, "உங்கப்பாவும் டாக்டரா..?" என்று மோகன் கேட்பது நல்ல நகைச்சுவை.
ஒரு வருடத்தில் பணக்காரர்களாகத் திரும்பி வருவோம் என்ற நம்பிக்கையுடன் பயணம் கிளம்பிய உற்சாகம், 48 வது நாளில் உயிருக்குப் போராடும் ஒருவனை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டுப் போக நேரும்போது தளர்ந்து, தேயிலைத் தோட்டத்திலிருந்து தப்பிக்க முயன்றவனை அடித்து புரட்டி இழுத்து வரும்போது நொறுங்கி, வருட இறுதியில் அத்தனை சம்பளத்தையும் காரணம் சொல்லிப் பிடித்துக் கொண்டு மீதிக்கு இன்னும் பல வருடங்கள் உழைக்க நேரும் என்று தெரிய வருகையில் சுக்கலாகிப் போவதும் கொடிய வரலாறு.
அதிலும் தப்பிக்க முயன்ற அதர்வாவின் கால் நரம்புகளை வெட்டுவதும், ஓடிப்போன கணவன் கடனை அடைக்க தன்ஷிகாவின் பணிக்காலம் நீட்டிக்கப்படுவதும், அவள் இறந்து போன நிலையில் அவள் மகளுக்கு ஆறுதல் தந்த காரணத்துகாக அதர்வாவின் தலையில் தன்ஷிகாவின் பொறுப்பையும் ஏற்றி இன்னும் ஒன்பது வருடப்பணி நீட்டிப்பு செய்வதும் அந்தமான் சிறைக் கொடுமையை விடவும் பெரிது.
இத்தனை செந்நீரும், கண்ணீரும் கலந்த துன்பியல் வாழ்வில் அங்கங்கே இழையோடும் நகைச்சுவை பாலைவன நீரோடை. குறிப்பாக உள்ளூரில் ராஜாவைப்போல் கணக்கில்லாத சின்ன வீடுகள் வைத்திருந்த தாத்தா, அந்தக் கணக்கை தன் இப்போதைய மனைவியிடம் கேட்க, "அதை உன் மந்திரிகிட்ட கேளு..." என்பது. அதற்கு சற்று முன்னர்தான் அகல கால்விரித்து உட்கார்ந்திருக்கும் அவரிடம் "பாத்து ராசா... உன் மந்திரி வெளியே தெரிஞ்சுடப் போறான்..." என்று கமெண்ட் அடிக்கிறார் அதர்வா.
வெள்ளைக்கார துரையாக வரும் 'டிம்', "இந்த வெட்டிப்பயல்களுக்காக வழக்கறிஞர் காந்தி ஏன் போராடுகிறார்..?" என்பதும், அதற்கு இன்னொரு வெள்ளைக்காரப் பெண்மணி கொதித்துப்போய் காந்தியின் சுயநலமில்லாத போராட்டத்தையும், தியாகத்தையும் சொல்லுமிடம் கைத்தட்டல் பெறும்.
இப்படி வலியும், வக்கணையுமாக எழுதப்பட்ட வசனங்களில் நாஞ்சில் நாடனின் அனுபவம் மிளிர்கிறது. படத்தின் மொத்த வலியையும் சில வரிகளில் சொல்லிவிட முடிந்த வைரமுத்துவின் பாடல்களுக்கு இந்த வருட தேசிய விருது காத்திருக்கிறது.
paradesi
ஒளிப்பதிவாளர் செழியனுக்கு இது 'மாஸ்டர் பீஸ்'. வறட்சியுனூடே வெளிச்சத்தையும், வளமையினூடே இருண்மையையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் அங்கங்கே கே.வி.மகாதேவனிலிருந்து இசைஞானி வரை வந்து போனாலும் அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
ஒரு வரலாற்றுக் கதையை இரண்டே கால் மணிநேரத் திரைக்கதையாக சுருக்கும் அவஸ்தையில் வெற்றியே கண்டிருக்கிறார் பாலா. இடைவேளைக்கும், கிளைமாக்ஸுக்குமான இடங்கள் துல்லியமாக வரையறுக்கப் பட்டிருக்கின்றன.
காணவே முடியாத தன் மனைவியையும், மகனையும் கண்ணால் கண்டுவிட்ட ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல், அவர்களும் இந்த மீளாப்பயணத்தில் இணைந்து விட்ட சோகத்தில் கதறும் அதர்வாவின் ஒற்றை அழுகை உலகெங்கிலும் அடிமைகளாக்கப்பட்ட தொழிலாளர்களின் ஒட்டுமொத்த காலச்சுவடு.
'நான் கடவுளி'ல் தடுமாறி, 'அவன் இவனி'ல் அடி சறுக்கிய பாலா, இந்தப் படத்தில் எழுந்து நிற்கிறார். பத்திரிகையாளர் காட்சிக்கு வந்திருந்த அவர், "இதில் என்ன குறை இருந்தாலும் சுட்டுக் காட்டுங்கள். அது நான் திருத்திக் கொள்ள வசதியாக இருக்கும்..!" என்றது கூட படத்தில் அவ்வளவாக குறைகள் இல்லை என்று அவரே நம்பியதன் வெளிப்பாடுதான்..!
படைப்பு நிலையைத் தாண்டி படத்தின் வணிக ரீதியான வெற்றி, வெகுஜன ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது. அதனால்...
நாயமா...ரே..! நல்ல தீர்ப்பு சொல்லுங்க..!
- வேணுஜி

கள்ளத் துப்பாக்கி - திரை விமர்சனம் ( Kallathuppakki Movie Review )


kalla-thuppakki-latest-movie
நல்ல 'துப்பாக்கி'யை மிரட்டி மிரட்டியே பிரபலமான படம். அதனாலேயே அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்கிற ஆவலில் பார்த்தே தீர வேண்டிய படமாகிப் போனது.
'சிட்டி ஆஃப் காட்' படத்திலிருந்து பலரும் எடுத்து சிந்தி விட்டுப்போன மிச்சத்தை 'வாரிச் சுருட்டி' வந்திருக்கிறார்கள். அதற்காக சர்வதேசத் தரத்தையெல்லாம் கற்பனை பண்ணி 'சீரியஸ்' ஆகிக் கொள்ள வேண்டாம்.
சென்னையில் போலீஸ் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் கொலை கொலையாக ரவுடிகள் சாய... விருதுநகருக்கு நகர்கிறது கதை.
நாளைய எம்.ஜி.ஆர், நாளைய சிவாஜி, நாளைய ரஜினி, நாளைய கமல், நாளைய அஜித்... ( நாளைய 'விஜய்' இல்லை. அவர்தான் 'நிஜத் துப்பாக்கி'யைக் காட்டி மிரட்டி விட்டாரே..? ) என்று ஐந்து 'ஸ்கூல்' பையன்களை அறிமுகம் செய்கிறார்கள்.
அவர்களில் ஒரு சின்னப்பையன் தவிர மற்ற யாருமே படம் முழுதும் பார்த்தும் கூட நினைவில் வர மறுக்கிறார்கள். ( எதிர்கால எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு வந்த சோதனை...)
பாதிப்படம் வரை அவர்களுக்கும், பள்ளி பி.டி மாஸ்டர் சம்பத்ராமுக்குமான முடக்கடிகள்தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. பையன்களால் அவர் 'சஸ்பென்ஷன்' ஆகி, இடைவேளையில் 'டிஸ்மிஸு'ம் ஆகி 'பையன்களை விட மாட்டேன்' என்று உறும, ஒரு கூட்டம் பையன்களைக் கடத்த... எதிர்பாராத ட்விஸ்டாக பையன்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பி.டி.மாஸ்டரின் மகளும் கடத்தப்படுகிறார்.
அதெல்லாம் சரி... 'கள்ளத் துப்பாக்கி'ன்னா என்னன்னு நீங்க கேட்கிற 'இலக்கண சந்தேகம்' படம் பார்த்த எங்களுக்கு வந்திருக்காதா..? வந்து மட்டும் என்ன..? முன்பாதியில் சம்பந்தம் இல்லாமல் ஒரு சீனில் பையன்கள் ஒரு துப்பாக்கியை வைத்திருப்பார்கள். பி.டி.மாஸ்டரின் கொடும்பாவியைக் கட்டி அதில் சுட்டுப்பழகுவான் ஒரு பையன். தட்ஸ் ஆல்..!
kalla-thuppakki
இரண்டாவது பாதியில்தான் முதல் பிளாட்பாரத்துக்கு வந்து சேர்கிறது 'ஸ்டோரி' ரயில். இதற்கு முன்னால் ஒரு சமயம் 'ஸ்கௌட்' பயிற்சிக்காக சென்னைக்கு வரும் பையன்கள் பி.டி.மாஸ்டர் பிடியிலிருந்து தப்பித்துப் போகும்போது ஒரு தாதாவுக்குக் கைமாற வேண்டிய கள்ளத்துப்பாக்கியும், சில லட்சம் பணமும் கிடைக்க, ஜாலியாக வாழ்க்கையை ஜமாய்க்கிறார்கள்.
பிறகு தாதா கையில் சிக்கி, சின்னபின்னமாகி அங்கிருந்து தப்பி ஊருக்கு வந்து பழையபடி பி.டி.மாஸ்டரை மட்டும் கலாய்த்தபடி இருக்கிறார்கள். அந்தத் 'துப்பாக்கியை' அவர்களிடமிருந்து கைப்பற்றதான் சென்னை தாதா இப்போது அவர்களைக் கடத்தியிருக்கிறார்.
'தாதா'விடமிருந்து சின்ன சேதாரங்களுடன் தப்பிய ஹீரோயினை 'தாத்தா' போட்டுத் தள்ளுவதும், பி.டி.மாஸ்டர் மென்டலாவதும் 'குலசாமி ஆத்தா அருளு'டன் செவ்வனே நிறைவேறுகின்றன.
ஒரு கதையை எங்கே ஆரம்பிக்க வேண்டும், எப்படிக் கொண்டு செல்ல வேண்டும், எங்கே முடிக்க வேண்டுமென்பதில் இயக்குனர் லோகியாஸுக்கு மிக்க தள்ளாட்டம் இருப்பது புரிகிறது. தாதாவிடம் சிக்கி, சிதிலப்படும் சிறுவர்களிடம் அந்த அனுபவத்தின் பதற்றம் கொஞ்சம் கூட இல்லையே..? அதுநாள் வரை பையன்கள் என்ன ஆனார்களென்று பெற்றவர்களும் தேடவில்லையா..?
ஒளிப்பதிவு சுமார் ரகம். இசையமைப்பாளர் கையில் கிடைத்த வாத்தியங்களையெல்லாம் எடுத்து 'கடுமையாக' இசைத்துப் பழகியிருக்கிறார்.
பிரசிடென்ட் பெண்ணைக் கட்டி, வீட்டோடு மாப்பிள்ளையாகிவிட்ட பி.டி.மாஸ்டர் சம்பத்ராமின் கேரக்டரும், அவரது நடிப்பும் படத்தில் ஆறுதல். ஹீரோயினை 'நாளைய சிம்ரன்' என்று காட்டாததும் இன்னொரு ஆறுதல்.
கமலுக்கு இருக்கிற ஆயிரத்து சொச்சம் பிரச்சினைகளில், அடுத்து ஒன்றாக இந்தப்படத்தின் டைட்டில் கார்டில் 'கமலின் ஆசியுடன்...' என்று போடுவதும் சேரலாம். 'கமல் வீட்டுக் கட்டுத்தறியும் கலைச்சேவை செய்யும்' என்று நினைப்பவர்கள் இனி எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம்.
கமல் அடுத்து நடத்தும் 'ஸ்கிரீன்ரைட்டிங்' பயிற்சி வகுப்புகளில் படமெடுக்கும் ஆசையுள்ள தன் ரசிகர்களையும் 'மானிய விலையில்' சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்கிறோம்.
பின் குறிப்பு - அந்தக் 'கள்ளத் துப்பாக்கி' யாருடையது என்று கேட்கவில்லையே..? அது 'கடல் மார்க்கமாக' கொண்டுவரப்பட்ட முக்கிய தலைவருடையதாம். அடங்கொய்யால...
-வேணுஜி

சட்டம் ஒரு இருட்டறை... - திரை விமர்சனம் ( Sattam Oru Iruttarai - Movie review )


சட்டத்தில் ஒரு ஓட்டையைப் போட்டு கொலை பாதகம் செய்தவர்களின் உயிர்களை அதே சட்டத்தில் இன்னொரு ஓட்டையைப் போட்டு ஆட்டையைப் போடும் கதை.
ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கி விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' பார்த்தவர்கள் அதனுடன் ஒப்பிடாமல் இந்தப்படத்தைப் பார்க்க முடியாது. ஒப்பிட்டே ஆக வேண்டும் என்பது போலவே '81 ல் வந்து ஐந்து மொழிகளில் வெற்றி பெற்ற படம் இது' என்பதை பட ஆரம்பத்திலிருந்தே நமக்கு நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக, ஏற்கனவே கடையைப் போட்டு ஐந்து ஊர்க்காரர்களுக்கு ஆப்பம் சுட்டு பரண்மீது வைத்திருந்த சட்டியை இந்த ஜெனரேஷன் பேத்தியிடம் கொடுத்து கடை போட்டுத் தந்திருக்கிறார் எஸ்.ஏ.சி. பேத்தி சுட்ட ஆப்பத்துக்கு 'பாயா' தயாரிப்பும் அவரே. ( டைரக்ஷன் மேற்பார்வை )
தமிழ்ப்படத்தில் முன்னாள் கேப்டனின் அந்த 'டெரர்' கண்கள் பாதிக்கப்பட்ட ஒருவனின் பழிவாங்கும் எண்ணத்தைப் பிரதிபலித்தது. ஆனால் இதில் அதற்கான வாய்ப்பு ஹீரோ தரணிடம் மிஸ்ஸிங். அதேபோல்தான் தரணின் அஸிஸ்டன்ட் கமிஷனர் அக்காவாக வரும் ரீமா சென்னிடமும் 'போலீஸ் மிடுக்கு' மிஸ்ஸிங்.
தரணுக்கு சொல்லிக் கொள்ளத் தக்க வேடம். அவரும் அதற்குமேல் அலட்டிக் கொள்ளாமல் சொல்லிக் கொடுத்ததை செய்துவிட்டுப் போயிருக்கிறார். இரண்டாவது படத்திலேயே அவருக்கு இரண்டு ஜோடிகள் கிடைத்ததற்கு 'மதுரை வீர சாமி'க்கு அவர் மண்டியிட்டு பூஜிக்கலாம்.
'பிளாஷ்பேக்' நாயகி பியாவுக்கு, 'மோட்டிவேட்' நாயகி பிந்து மாதவியை விட கொஞ்சம் தூக்கலான கேரக்டர். அவரைப் போட்டுத் தள்ளி விடுகிறார்கள் என்பதால் கொஞ்சம் மீட்டருக்கு மேல் போட்டுத் தந்திருக்கிறார்கள் போலிருக்கிறது.
sattam
கடந்த காதல் தெரிந்தே பழகும் பிந்துமாதவிகள் போல காதலிகள் கிடைத்தால் எந்த மனிதனும் ஹீரோவாகலாம். கதையை பேலன்ஸ் செய்ய உதவுகிற பிந்துமாதவி அந்த வேலைக்குப் பொருத்தமாகவே இருக்கிறார்.
ஒரிஜினல் சரக்கில் உள்ள கொலையாளிகளைக் கொல்லும் ஹீரோவின் டெக்னிக் அப்போதைக்கு புதிய உத்தியாக இருந்ததைப் போலவே இப்போதும் ரசிக்க முடிகிறது. ஆனால் வில்லன்களை சிருஷ்டித்திருக்கும் டெக்னிக்குகள் முப்பது வருடப் பழமையானவை.
வில்லன்களில் ராதாரவி நடிப்பிலும், இந்திரஜித் உருவப் பொருத்தத்திலும் தேறி விடுகிறார்கள். ஆனால் சோடா புட்டிக் கண்ணாடியும், செருகி வைத்த தொப்பையுமாக வரும் சுரேஷை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
தம்பிதான் இரண்டு கொலைகளுக்குக் காரணம் என்று அறியும் ரீமாசென் அவரை ஜெயிலில் போட எவிடென்ஸ் இல்லாமல் தவிக்கிறார். ஆனால் இனி செய்யப்போகும் கொலையைத் தடுக்க அவரை ஜெயிலில் போடுகிறார்.
போலீஸுக்கான அதிகார எல்லைகள் என்ன, ஜெயிலருக்கான அதிகார எல்லைகள் என்ன, ஒருவர் கொஞ்ச நாள் ஜெயிலராக இருந்துவிட்டு பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டராக முடியுமா என்றெல்லாம் நாம் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் 'அதையெல்லாம் மறந்துடுங்க...' என்று களத்தில் குதிக்கிறார் எஸ்.ஏ.சி.
அவர் என்ட்ரிக்குப் பின் நமக்கு சட்டம் பற்றி எந்த சந்தேகமும் வருவதில்லை. அதைத்தான் அவர் கையில் எடுத்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டதே..?
சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவில் பாங்காக் காட்சிகள் குளுமை. அதேபோல் விஜய் ஆன்டனியின் இசையில் 'ஆதாம் ஏவாள்' இதம்.
படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்திருந்தால் முதல் காட்சியில் அறிமுக இயக்குநர் சினேஹா பிரிட்டோவை ரஜினி, கமல், விஜயகாந்த், சிரஞ்சீவியின் கால்களில் விழ வைத்திருக்க மாட்டார்கள். நன்றாக வந்திருந்தாலும் அந்த சீனைத் தூக்கியிருக்கலாம்.
ஆனால் 'ஸ்கிரிப்ட் தன்னுடையது இல்லை' என்று ஆறுதலடைய முடிகிற சினேஹா பிரிட்டோ இன்னொரு விஷயத்திலும் மகிழ்ச்சியடையலாம். இது வெற்றிப்படமாகியிருந்தால் அடுத்தடுத்து 'நீதிக்குத் தண்டனை', 'சட்டப்படி குற்றம்', 'செந்தூரப்பாண்டி' என்று எஸ்.ஏ.சியின் படங்களை மீண்டும் எடுக்க நேர்ந்திருக்கலாம்.
சிக்காமல் தப்பித்தார் சினேஹா..!
-வேணுஜி

நீதானே என் பொன்வசந்தம் - திரை விமர்சனம்


Neethane-En-Ponvasantham_movie_review
கல்லூரிப் பருவத்தில் ஜீவாவுக்கும், சமந்தாவுக்கும் வரும் காதல் அப்போதைக்கு வந்ததில்லை, அது ஆரம்பப் பள்ளியில் ஆரம்பித்துப் பிரிந்து, உயர்நிலைப் பள்ளியில் மீண்டும் துளிர்த்துப் பிரிந்து மீண்டும் கல்லூரியில் தொடர்கிறது. அது மீண்டும் என்னவாகிறது என்பதை நீட்டி முழக்கி... சீட்டை சூடாக்கிச் சொல்கிறார் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.
மூன்று பருவங்களில் ஜீவாவையும், சமந்தாவையும் வித்தியாசப் படுத்தியிருப்பது படத்தின் ஹைலைட். அதிலும் உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் ஜீவாவையும், சமந்தாவையும் காட்டியிருப்பது இந்திய சினிமாக்களிலேயே அற்புதக் காட்சி என்று சொல்ல வேண்டும்.
மூன்று நிலைகளிலும் தெரியும் ஜீவாவின் பரிமாணப்பட்ட நடிப்பு பாராட்ட வைக்கிறது. உடலைப் பள்ளிப் பருவத்துக்கேற்றது போல் மாற்றிக் கொண்டிருப்பதிலும், ஹேர்கட், பாடிலாங்குவேஜ் என்று அனைத்து நிலைகளிலும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருப்பதிலும் தனித்துத் தெரிகிறார் ஜீவா.
பள்ளி மாணவியாக வரும் சமந்தாவுக்கு ஆளைக் காட்டியே ஸ்கூலில் அட்மிஷன் வாங்கி விடலாம். ஆள் சிறுத்து, ஆடை சிறுத்துத் தெரிவதோடு தன்னை டீ வாங்கிக் கொடுக்க ஜீவா அழைத்ததும் தன் தோழிகளைப் பெருமையோடு பார்க்கும் பார்வையில் 'செம க்யூட்..!'
அத்தனை எதிர்பார்ப்புகளையும் உள்ளேயே அடக்கி வைத்திருந்து கிளைமாக்ஸில் ஜீவா கைநழுவிப் போனதும், அக்காவிடம் உடைந்து கதறும்போது நம் பரிதாபத்தை சம்பாதித்துக் கொள்கிறார்.
சந்தானம் வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பலைகளால் நிறைகிறது தியேட்டர். "சுடிதார் சாயம் போனாதான் பேன்ட் சட்டையைத் தேடி வருவே, இல்ல..?" என்று காதலே கதியாக அலையும் ஜீவா, தன்னைத் தேடி வரும்போது போட்டுப் பார்ப்பதில் கலாய்க்கிறார்.
சந்தானத்தின் காதலும், சமந்தாவின் குண்டு பிரண்டுடன் அமைவது 'வி.தா.வ' வின் காமெடி வெர்ஷன். ஆணோ, பெண்ணோ குண்டாக இருந்தால் அவர்கள் காமெடிக்குதான் லாயக்கு என்கிற சினிமா தத்துவத்தை கௌதம் மேனனும் மீற முடியாதது பரிதாபம்.
Gautham Menon, Samantha
அந்தந்த பருவத்தின் உணர்வுகளை அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பதில் கௌதம் மேனனுக்குள்ளிருக்கும் எழுத்தாளர் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். பள்ளியில் தன்னை விட்டு இன்னொருவனை 'ப்யூப்பிள் லீடரா'க்கியதற்கு வெளியே காட்டாமல் தன் வெறுப்பை ஜீவா வெளியிடுவதும், "அதுக்காக நான் லீடரானதுக்கு சந்தோஷப்பட மாட்டியா..?" என்று சமந்தா கேட்பதும் அவர்களது மன இடைவெளியின் அழகான வெளிப்பாடுகள்.
எப்போதும் வீட்டுக்குத் திரும்பும்போது தன்னை அழைத்துச் செல்லும் சமந்தா வராமல் போனதும், ஏன் வரவில்லை என்று அவர் கேட்கப் போக, "நீ போயிருப்பேன்னு நினைச்சேன்..." என்று சமந்தா சொல்வதும், "போயிருக்கணும்னு நினைச்சியா..?" என்று பதிலுக்கு ஜீவா கேட்பதும் தேர்ந்த வசனங்கள்.
இருந்தும் படம் நெடுக இப்படியே போய்க்கொன்டிருப்பதில் ஒரு வித அலுப்பு மேலிடுகிறது. அதிலும், கிளைமாக்ஸில் வைத்து மாற்றி மாற்றி இருவரும் பேசிக் கொண்டே இருப்பது 'போதும்டா சாமி' என்றாகி விடுகிறது.
மொத்தக் கதையில் சமந்தாவின் லாஜிக்குகளும், அவரது எதிர்பார்ப்புகளும் நியாயமானதாகவே இருக்க, ஜீவாதான் ஆணாதிக்க மனப்பான்மையுடன் அவரைப் போட்டுப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. தன் குடும்ப சூழலை திடீர் ஞானோதயத்தில் நினைத்துப் பார்த்து காதலனே கதியாக இருக்கும் ஒரு பெண்ணை அவர் தவிர்க்கும் விதமாகவே நடந்து கொள்வது 'மேல் சாவனிஸம்'தான்..!
இன்னொரு பெண்ணிடம் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டு, ஊர் கூடி ரிசப்ஷன் நடத்தி திருமணம் நடக்கவிருக்கும் ஒருமணி னேரம் முன்பு போய் அந்தத் திருமணத்தை நிறுத்துவதும்கூட அதே சாவனிஸம்தான்..!
அந்தக்கால நடிகை அழுகாச்சி விஜயகுமாரி போல, சமீப காலத்தில் காதலுக்காக இவ்வளவு அழுத நடிகை சமந்தாவாகத்தான் இருக்க முடியும். கடைசி ஒரு மணி நேரத்தில் பிழிந்து பிழிந்து அழுகிறார். இந்தக் காலப் பெண்கள் தங்கள் காதலில் இவ்வளவு வீக்காகவா இருக்கிறார்கள் மிஸ்டர் மேனன்..?
இளையராஜாவின் இசையில் அவர் காலத்திய நவீன இசையான 'போனி எம்'மின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. நான்கு பாடல்கள் ரசனையுடன் ஒலித்தாலும், கௌதம் மேனன் பட பாணியிலிருந்து சற்று விலகியே பயணிக்கிறது. பின்னணி இசை வழக்கம்போல் நேர்த்தி.
ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவு இயல்பான சினிமாவைக் காட்ட அதிகம் மெனக்கெடாமல் இயங்கியிருக்கிறது.
அடுத்தடுத்து பிரிந்த, சேர்ந்த காதல் கதைகளாகவே சொல்லிவிட்ட கௌதம் வாசுதேவ் மேனன் கொஞ்ச காலத்துக்கு காதல் கதைகளின் பக்கம் போகாமலிருப்பது நல்லது.
நீ.எ.பொ.வ - முன்பாதி லவ்வு... பின்பாதி ஜவ்வு..!
-வேணுஜி

கும்கி - திரை விமர்சனம்


stills-kumki-
புதிய களங்களில் பயணப்படும் இயக்குநர் பிரபு சாலமன் இந்த முறையும் நமக்கு அதிகம் அறிமுகமில்லாத களத்தில்... ஆனால் ரசிக்க வைக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார்.
நாம் அடிக்கடி தினசரிகளில் படிக்கும் ஊருக்குள் யானை புகுந்து மக்களின் உயிரை வாங்கும் கதைதான். அப்படி மலை கிராமங்களில் ஒன்றான 'ஆதி காடு' என்ற இடத்தில் 'கொம்பன்' என்ற வம்பான யானை புகுந்து வருடம்தோறும் சில உயிர்களைப் பலி வாங்க அதை வழிக்குக் கொண்டுவர, பழக்கப்பட்ட கும்கி யானையைக் கொண்டு வர முடிவெடுக்கிறார்கள்.
முதல் காட்சியில் முரட்டு யானை கிராமத்துக்குள் புகுந்து செய்யும் அட்டகாசங்கள் நம்மை ஒரு வித்தியாச அனுபவத்துக்குத் தயார்ப்படுத்துவது உண்மை. இன்னொருபக்கம் ஒரு பூனைக்குட்டியை வளர்ப்பது போல யானையை வளர்த்து விசேஷ நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு விட்டுக் கொண்டிருக்கிறார் ஹீரோ விக்ரம்பிரபு.
ஆதி காட்டுக்கு அனுப்ப வேண்டிய கும்கியை, அசந்தர்ப்பமாக அனுப்ப முடியாமல் போக, ஒரு செய்நன்றிக்காக அனுபவமில்லாத தன் யானையை 'கும்கி'யென்று பொய் சொல்லி அந்த ஊருக்குள் பிரவேசிக்கிறார் விக்ரம்பிரபு.
kumki
அங்கே ஊர்த்தலைவரின் மகள் லஷ்மிமேனனைப் பார்த்து காதல் வயப்பட, அவரது யானை கும்கியில்லை என்ற உண்மையும், மரபும், கட்டுப்பாடுகளும் மிக்க இடத்தில் அவரது காதலும் வெளியே தெரிந்தால் என்ன விளைவை ஏற்படுத்துமோ என்கிற பதைபதைப்பும் 'யானை சவாரி' த்ரில்லாக நம்மை அழைத்துப் போகிறது.
ஹீரோவாகியிருக்கும் 'விக்ரம் பிரபு' நம்பிக்கை வைக்கக் கூடிய அறிமுகமாகியிருக்கிறார். குரல், மாடுலேஷன், தோற்றம் என்று ஒரு நடிகனுக்கு இருக்க வேண்டிய புறத்தகுதிகளுடன், நடிப்பிலும் அமர்க்களப் படுத்தியிருக்கிறார் விக்ரம்பிரபு.
காதல் வயப்படுவதிலும், அந்தக் காதல் கைகூடாது என்ற நிலையில் காட்டும் விரக்தியிலும், கடைசிக் காட்சியில் உணர்வுகளை இழந்து உடைந்து கதறும் காட்சியிலும் தான் நடிகர் திலகம் சிவாஜி மற்றும் பிரபுவின் வாரிசு என்ற பெயரைக் காப்பாற்றியிருக்கிறார்.
எளிதாகப் பழக முடியாத விலங்கான யானையுடனும் அனாயசமாகப் பழகி நிஜமான பாகன் போலவே அதிசயப் படுத்தியிருக்கிறார் விக்ரம் பிரபு. தந்தங்களைப் பிடித்து ஏறி யானைக்கு முத்தமிடும் காட்சி அழகு.
உண்மையில் லஷ்மிமேனன் அறிமுகமாகியிருக்க வேண்டிய படம் இது. வெள்ளந்தித்தனமும், விடலைப்பருவமும் கைகோர்க்கும் லஷ்மியின் அழகு முகம் கல்வெட்டாக மனத்தில் நிலைக்கிறது. அருவியின் உச்சியைப் பார்க்க ஆசைப்பட்டு அதற்கு உதவும் விக்ரம் பிரபுவின் கன்னத்தில் லஷ்மி இடும் காதலின் அச்சாரம் அமர்க்கள தருணம்.
எல்லா மேட்சிலும் செஞ்சுரி அடிக்கும் 'தம்பி ராமையா' இந்த மேட்சையும் விட்டு வைக்கவில்லை. காமெடியையும், சென்டிமென்ட்டையும் கலந்து தருவதில் பின்னியிருக்கிறார். கரிக்கட்டையாகக் கருகும் கடைசிக் காட்சியில் கண்களை நனைக்கவும் செய்கிறார்.
குணச்சித்திர வேடத்தில் அறிமுகமாகியிருக்கும் 'ஜோ மல்லூரி' ஊர்த்தலைவராக வாழ்ந்திருக்கிறார். அவரது குடும்பத்தின் மூத்த உறுப்பினரான ஜூனியர் பாலையாவின் நடிப்பும் கச்சிதம்.
பாத்திரங்களுக்குண்டான நடிகர்களைத் தேர்வு செய்வதில் எப்போதுமே சோடை போகாத பிரபு சாலமன் இதிலும் வனச்சரகர், ரேஞ்சர், டி.எஃப்.ஓ போன்ற துணைப் பாத்திரங்களுக்குக் கூட மிகப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து நடிக்கவும் வைத்திருக்கிறார்.
image kumki
இவர்களைத் தாண்டி 'மாணிக்கமாக' நடித்திருக்கும் யானையும் ஹீரோவுக்கு நிகரான பாத்திரமாகியிருக்கிறது. "ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகுதுன்னு தோணுது. மாணிக்கத்தை பத்திரமா பாத்துக்கோ..!" என்று கும்கி பயிற்சியாளர் 'யார்' கண்ணன் சொல்லும்போது 'மாணிக்கத்தை'ப் பார்க்க நமக்கே பரிதாபமாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுகுமாரின் அரிய உழைப்பில் 'அருவிக் காட்சிகள்' சர்வதேசப் படங்களிலும் காணாத முயற்சி. இசைஞானியின் நினைவுகளோடு ஒலிக்கும் இமானின் பாடல்களும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
எல்லாம் இழந்துவிட்ட நிலையிம் விக்ரம் பிரபுவின் காதலாவது கைகூடி இருக்கலாமே என்ற எண்ணம் கடைசியில் எழாமலில்லை. அதைப் படம் நிறைவேற்றவில்லை என்றாலும் அதற்கான சாத்தியத்தை ஜோ மல்லூரியின் ஒரு 'குளோஸ் அப்' தருகிறது.
கும்கி - யானைகளில் 'மாணிக்கம்..!'
-வேணுஜி 

நீர்ப்பறவை - திரை விமர்சனம்


Neerparavai
தமிழ்ப் படங்களில் முதல் முதலா மீனவர் மீதான துப்பாக்கி சூட்டின் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க படம். அந்த வகையில இயக்குனர் சீனு ராமசாமியின் முயற்சிக்கு வந்தனங்கள்.
நூற்றுக் கணக்கான மீனவர்கள் இதுவரை இலங்கைக் கடற்படையால சுட்டுக் கொல்லப்பட்டும் இது ஒரு இந்தியப் பிரச்சினையா கருதப்படாம தமிழ்நாட்டுப் பிரச்சினையாவே கருதப்படறதை நெற்றிப்பொட்டில அடிச்ச மாதிரி ஒரு ஏழை மீனவப் பெண்ணின் பார்வையிலிருந்து சொல்ல ஆசைப்பட்டிருக்கிறார் சீனு ராமசாமி.
அது முழுக்க டாக்குமென்டரியா ஆகிடாம இருக்கணும்கிறதுக்காக அதில் ஒரு இனிய காதல் கதையையும் கலந்து சொல்லியிருக்கிறார்.
கடலுக்குப் போன தன் கணவன் திரும்பி வருவான்னு 25 வருஷங்களா கடலைப் பார்த்துக் காத்துக்கிட்டிருக்க நந்திதா தாஸே தன் வீட்டுக் கொல்லைப் புறத்துல அதே கணவனைக் கொன்று புதைச்சதா ஒரு பூகம்பம் கிளம்ப, நந்திதா மீதான போலீஸ் விசாரணைல கதை பிளாஷ்பேக்குல விரியுது.
இதுவரை நாம் பாத்திருக்கிற ஹீரோ விஷ்ணுவுக்கு இதுல முற்றிலும் வேறான வேடம். முதல் பாதிக் கதை வரை ஒரு 'குடி' மகனாவே அவர் வலம் வர, 'நீர்'ப்பறவைன்னா அர்த்தம் இதுதானோன்னு நம்மை ஏகத்துக்குக் குழம்பவே வைக்குது அவர் கேரக்டர்.
அம்மாவோட செல்லத்துனால அவர் அப்படி ஆனார்ன்னு ஒரு கதை சொல்லப்பட்டாலும், அதைத் தாண்டி அவருக்கு வேறு எந்த நல்ல குணங்களும் இருக்கிறதாவும் தெரியலை. போதை மறுவாழ்வு மையத்துக்குப் போய் வந்த பின்னாலதான் அவரோட நல்ல முகம் வெளியே வந்து மனுஷனாகிறார்.
அவரோட காதலுக்கு இலக்காகும் சுனைனாதான் இன்றைய நந்திதாவாம். இருபது வயசுல சுனைனாவாகவும், நாற்பத்தைந்து வயசுல நந்திதா தாஸாகவும் ஒரு பெண்ணின் தோற்றம் எப்படி மாறித் தெரியும்கிறது இயக்குனருக்குதான் வெளிச்சம். சுனைனாவுக்கே வயசான வேடமோ இல்லை நந்திதாவுக்கு இளமையான வேடமோ சாத்தியம்தான்.
இதில் ஆறுதலான விஷயம் சுனைனாவும் சரி, நந்திதா தாஸும் சரி, அற்புதமா நடிச்சிருக்கிறதுதான். நந்திதா பற்றிச் சொல்ல வேண்டிதில்லை. ஆனா 'டல் மேக்கப்'ல வர்ர சுனைனா இயல்பான நடிப்புல பிச்சு உதறியிருக்குன்னுதான் சொல்லணும்.
குடியை விட்டுட்டு சுனைனாவைப் பார்க்க விஷ்ணு வரும்போது, அவரைக் குடிச்சுட்டு வர்ரார்னே நினைச்சு "சாத்தானே, அப்பாலே போ..." ன்னு விரட்டற ஒரு இடம் போதும், சுனைனா நடிப்புக்கு. கையில பைபிளும், பாவாடை சட்டையுமா ஒரு கடல்புறத்து கிறிஸ்தவப் பெண்ணின் அச்சு அசலான தோற்றத்துல சுனைனா வாழ்ந்திருக்குன்னே சொல்லலாம்.
neer-paravai
சீனு ராமசாமிக்கும், சரண்யா பொன்வண்ணனுக்கும் போன ஜென்ம பந்தம் ஏதும் இருந்திருக்கணும். 'தென்மேற்குப் பருவக்காற்று'ல கள்ளிக் காட்டுத் தாயா அவர் படைச்ச அம்மாவுக்கு மாற்றா இதுல கடல்புறத்துத் தாயா சரண்யா. மகன் மேல வச்ச குருட்டுப் பாசத்துல அவன் கெட்டுப் போறதைக் கூட உணராத இப்படிப்பட்ட அம்மாக்கள் தமிழ்நாட்டுல எக்கச் சக்கம்.
சரண்யாவோட கணவரா 'பூ' ராம். எந்தக் கேரக்டருக்குள்ளும் தன்னை அடைச்சுக்கத் தெரிஞ்சவர், இதுலயும் தன்னை சரியா அடைச்சுக்கறார்.
பட ஆரம்பத்துல வயசாளியா அறிமுகம் ஆகற தம்பி ராமையாவுக்கு பிளாஷ்பேக்குல ஏதோ அழுத்தமான வேடம் இருக்கும்னு பார்த்தா வழக்கமான காமெடி குடிகார வாத்தியார் வேடம்தான். "ஒருத்தன் குடியை நிறுத்தறான்னா அவனுக்கு அல்சரோ, காதலோ வந்திருக்குன்னு அர்த்தம்..." னு அவர் வைக்கிற 'பஞ்ச்' சை ரசிக்கலாம்.
படகு உரிமையாளர் அருள்தாஸ், பாதிரியார் அழகம்பெருமாள், யோகி தேவராஜ், 'பிளாக்' பாண்டி, வடிவுக்கரசின்னு நிறைய கேரக்டர்கள் கடல் புறத்துக்கு கலர் சேர்க்கிறாங்க. அதுல படகு கட்டும் தொழில் செய்யும் இஸ்லாமியர் சமுத்திரக்கனியின் கேரக்டர் மட்டும் மனசுல பதியுது.
சமுத்திரக்கனி நான்கைந்து சீன்கள்ள மட்டுமே வந்தாலும் படத்தின் மனசாட்சியாகி மீனவர் பிரச்சினைகளை நியாயத் தராசா எடுத்து வைக்கிறார். சபாஷ் கனி..!
பாலசுப்ரமணியெத்தின் ஒளிப்பதிவில் கடல் மின்னுது. என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் 'பற பற...' பாடலும், அதற்குண்டான ஆர்க்கெஸ்ட்ரேஷனும் மனசுக்குள்ள குடியேறிடுது. மற்ற பாடல்கள் ஓகே ரகம்.
கணவனிடம் வைத்த காதல்லயும், கணவன் வீட்டார் மீதான பாசத்திலும் குறை வைக்காத நந்திதா தாஸ், அந்தக் கணவனோட ஒரே சொத்தான பிள்ளையை ஏதோ ஊரார் பிள்ளையாவே வளர்த்திருக்கிறதாதான் தோணுது. கல்யாணம் ஆகும்வரை அந்தப் பிள்ளை அம்மாவுடன்தானே இருந்திருப்பார்..? அத்தனை வயசு வரை தெரியாத அப்பா பற்றிய ரகசியம், விருந்தாளி போல் வந்த வேளையில மட்டுமே அவருக்குத் தெரிய வர்ரது திரைக்கதை சறுக்கல்.
நீர்ப்பறவை - கடலும், கவலை சார்ந்த இடமும்..!
-வேணுஜி

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... - திரை விமர்சனம்


'தென்மேற்குப் பருவக்காற்று' அதிர்ஷ்டக் காத்தாவும் அமைஞ்சுபோன விஜய் சேதுபதிக்குன்னு பாத்துப் பாத்து கேரக்டர்கள் அமையுதே..?
இதுலயும் அப்படித்தான்... காதல் கைகூடி, இன்னும் ரெண்டுநாள்ல கல்யாணம்கிற வேளையில சும்மா ஃபிரண்ட்ஸோட கிரிக்கெட் விளையாடப் போய் மாட்டிக்கிறார் ஒரு பிரச்சினையில...
அதைப் பிரச்சினைன்னும் சொல்ல முடியாது. பிரண்ட் ஒரு சிக்சர் அடிக்கிறார். பந்தை கேட்ச் பண்ணப் போற விஜய் சேதுபதி, மேலே பந்தைப் பாத்துக்கிட்டே பின்னாலேயே போய் கால் இடறி விழறார். அவரே சுதாரிச்சும் எழுந்துடறார்.
"என்ன ஆச்சு..? நீ பாலை அடிச்சே... நான் கேட்ச் பிடிக்கப் போனேனா... கீழ விழுந்துட்டேனா..? தலையில அடி பட்டிடுச்சு... இந்த இடத்துலதான் 'மெடுலா ஆப்லாங்கேட்டா' இருக்கு. அது ஒண்ணுமில்ல... கொஞ்ச நேரத்துல சரியாகிடும்..!" ன்னு அவர் பேசறது அவங்க ஃபிரண்ட்ஸைப் போலவே நமக்கும் நார்மலாதான் தோணுது.
ஆனா அடுத்த அரைமணி நேரம், ஒரு மணிநேரம்னு அவர் இதே வசனத்தை திரும்ப திரும்ப சொல்லும்போதுதான் நிலைமை கட்டுக்கு மீறிப் போனதே தெரியுது, ரிசல்ட், அவருக்கு நிகழ்காலம் உள்பட, கடந்த சில வருஷங்கள்ள கடந்து போன எதுவுமே ஞாபகம் இல்லை - காதல், காதலி உள்பட...
இப்படி ஒரு பிரச்சினைல சிக்கிக்கிட்ட அவரை மீதி இருக்கிற மூணு நண்பர்கள் அந்தப் பிரச்சினை வெளியே தெரியாம காபந்து பண்ணி ரெண்டு நாளும் தங்களோடவே வச்சிருந்து... குடும்பம், அவர் காதலி எல்லாத்துக்கும் 'டேக்கா' கொடுத்து எப்படி அவரை மணமேடை வரை கொண்டு வர்ராங்கன்றதுதான் மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கற அட்டகாச ஸ்கிரீன்பிளே..!
nkpk-magicalsongs
இந்த கஷ்டமெல்லாம் அவங்க பிரண்ட்ஸுக்குதான். ஆனா நமக்கு... சுவாரஸ்யமும், சிரிப்பும் குன்றாத என்டர்டெயின்மென்ட் உத்தரவாதம். அதிலும் அந்த திருமண வரவேற்பு சீன் காலத்துக்கும் நினைச்சு சிரிக்க வைக்கிற ரகம்.
ரிசப்ஷன் ஹாலுக்கு வந்தும், "யாருக்குடா கல்யாணம்..?" ன்னு கேட்கிற விஜய் சேதுபதியை வச்சுக்கிட்டு பிரண்ட்ஸ் படற அல்லாட்டம் சூபர்ப்.
அப்போதைக்கு அத்தை மகன் சதீஷுக்கு கல்யாணம்னு புளுகி, அந்த சதீஷ் வந்ததும் வேறொன்றைப் புளுகி... பக்கத்துல நிக்கிறது தன் காதலின்னு தெரியாம, "ப்ப்பா... யாருடா இவ... பேய் மாதிரி இருக்கா..? இவளையா சதீஷ் லவ் பண்னினான்..?" ன்னு ஆரம்பிச்சு, விஜய் சேதுபதி சீரியஸாக அடிக்கிற லூட்டி அமர்க்களம்.
அபோதைக்கு அவரைக் கட்டிப்போடற ஒரே மந்திரம், "மச்சி நீ சொன்னா மாடிலேர்ந்து கூட குதிப்பேண்டா..!"ன்னு ஒரே ஒரு நண்பனுக்கு மட்டும் அவர் கட்டுப்படறதுதான். அந்த ஒரு மேட்டரை வச்சுக்கிட்டே கல்யாணம் வரை கொண்டுவந்து... சுபமாகிறது படம்.
சீரியஸாக முகத்தை வச்சுக்கிட்டே காமெடியில சிக்சர் அடிக்கிறார் விஜய் சேதுபதி. "என்ன ஆச்சு..?" ன்னு அவர் ஆரம்பிச்சா தியேட்டரே அல்லோலகல்லோலப்படுது.
அதேபோல், "சிவாஜி செத்துட்டாரா..?" என்று மிரள்றதும், சதீஷுக்குக் கல்யாணம் என்றதும், "நம்ம சதீஷா... சின்னப் பையன்டா அவன்..." ன்னு ஆச்சரியப்படறதும், ரிசப்ஷன்ல வச்சு மணப்பெண்ணைத் திரும்பிப் பார்க்கிறப்பவெல்லாம் "ப்ப்பா... பொண்ணு பேய் மாதிரி இருக்காடா..!" ன்னு அரற்றும்போதும் தியேட்டரில் கைத்தட்டல் காதைப் பிளக்கும்.
'தன்னைப் பார்த்தா அடித்து விரட்டுவான்...'ன்னு பம்மற 'நாகராஜ் அண்ணன்'னு ஒரு கேரக்டரைப் பார்த்து விஜய் சேதுபதி உச்சி மோந்து பாசத்தைப் பொழியறதும், நினைவு சீரானதும் கல்யாண போட்டோவில் அதே நாகராஜ் அண்ணனைப் பார்த்து, "இவனுக்கெல்லாம் சூடு சொரணையே இல்லையாடா..?" ங்கிறதும் மாஸ்டர் பீஸ் காமெடி.
விஜய் சேதுபதியோட பிரண்ட்ஸா வர்ர ராஜ்குமார், விக்னேஸ்வரன், பகவதி பெருமாளும் புதுமுகங்களா உணர முடியாம கேரக்டர்களாவே மாறிப் போயிருகாங்க. அங்கங்கே பேய்ப்படம் ரேஞ்சுல ஓவரா காட்டற அவங்க எக்ஸ்பிரஷன்களை மட்டும் டைரக்டர் மட்டுப்படுத்தி இருக்கலாம்.
பெரிய கேரக்டர் இல்லாட்டியும் விஜய் சேதுபதியோட காதலியா வர்ர காயத்ரியோட நடிப்பும், கேரக்டரைசேஷனும் ஓகே. வேத் ஷங்கரோட இசையும், சி. பிரேம்குமாரோட ஒளிப்பதிவும், படத்தோட கைப்பிடிச்சு நம்மைக் கூட்டிட்டுப் போகுது. 'இது இவரோட கதை...' ன்னு பிரேம்குமாரைக் காட்டும்போது அவரைப் பார்க்கப் பாவமா இருக்கு..!
இயக்குநர் பாலாஜி தரணீதரன் தமிழ்சினிமாவுக்குப் பெருமைமிக்க வரவு. அவரை அறிமுகம் செய்த புரட்யூசர் வி.எஸ்.ராஜ்குமாரும், படத்தை வெளியிட்ட ஜே.சதீஷ்குமாரும் பெருமைப் பட்டுக்கலாம்.
தொலைஞ்ச பக்கங்கள் - தொலையாத வெற்றி..!
-வேணுஜி

சென்னையில் ஒரு நாள் - சினிமா விமர்சனம்

நாட்டுக்குத் தேவையான நல்ல செய்தி சொல்லியிருக்கும் படம். இன்றைய மருத்துவத்தின் இன்றியமையாத தேவையான உறுப்பு தானத்தை வலியுறுத்தியிருக்கும் கதாசிரியர்கள் பாபி - சஞ்சய்க்கும், இயக்குனர் 'ஷஹித் காதரு'க்கும் வந்தனங்கள்.
சென்னை சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஜெயப்ரகாஷ் - லஷ்மி ராமகிருஷ்ணன் தம்பதியின் மகன் சச்சினின் இதயத்தை எடுத்து வேலூரில் மாற்று இதயம் வேண்டி மணித்துளிகளை எண்ணிக் கொண்டிருக்கும் பிரபல ஹீரோ பிரகாஷ்ராஜ் - ராதிகா தம்பதியின் மகளுக்குப் பொருத்த வேண்டியிருக்கிறது.
அதற்கு மாபெரும் சவாலாக இருப்பது 'டிராஃபிக்'. ஒன்றரை மணிநேரத்தில் ஏறக்குறைய 125 கிலோமீட்டர் தூரத்துக்குப் பயணப்பட்டு இதயம் கொண்டு செல்லப்பட்டால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும் என்ற நிலையில் அதை எப்படி சாதிக்கிறார்கள் என்பதை ஒரு த்ரில்லராகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
இது கற்பனைக் கதையல்ல - நிஜமான சம்பவத்தின் நகல் எனும்போது இன்னும் சுவாரஸ்யம் குறையாமல் பார்க்க முடிகிறது.
படத்தின் பின்பாதி காரின் வேகத்துடன் பயணப்படுகிறது என்பதால் முன்பாதியில் மூளைச்சாவு அடைந்த சச்சின் முக்கிய சேனலில் வேலைக்குச் சேர்வது, அவனுக்கும் அப்பா, அம்மாவுக்கும் இருக்கும் பிணக்கு, இணக்கம் மற்றும் நட்பு, காதல் போன்ற நிலைகள் - ஹீரோ பிரகாஷ்ராஜின் வல்லமை, குடும்பத்துக்கே 'கால்ஷீட்' கொடுக்க வேண்டிய அவரது நேரப்பற்றாக்குறை - குடும்ப சூழ்நிலைக்காக 'கைநீட்டி' விடும் கறை படிந்த டிராஃபிக் போலீஸ் சேரன், அந்த அவமானத்தால் அவர் தங்கையின் உறவில் ஏற்படும் விரிசல் என்று அனைத்துப் பாத்திரங்களின் நிலைகளையும் மென்மையாக விவரிக்கிறார் இயக்குனர்.
எல்லா பாத்திரங்களையும் ஒரு கோட்டில் இணைக்கிறது சம்பவ தினமான 'செப்டம்பர் 16'. இதயம் கொண்டு செல்லப்படும் காரை சேரன் ஓட்ட, இதய மருத்துவர் பிரசன்னா, சச்சினின் நண்பன் மித்துன் உடன் பயணிக்கிறார்கள்.
தன் மகனின் இதயத்தைத் தர தந்தை மறுப்பது கேட்டு "என் மகள்ன்னு தெரிஞ்சுமா கொடுக்க மாட்டேங்கிறான்..? மினிஸ்டருக்குப் போனைப் போடு..." என்கிற அகந்தையில் ஆரம்பித்து, "சினிமாவில நீங்க ஜெயிச்சிருக்கலாம். ஆனா வாழ்க்கையில தோத்துட்டீங்க..." என்று மனைவியிடம் வாங்கிக் கட்டி தலைகுனிவது வரை பிரகாஷ்ராஜ் பிரகாசிக்கிறார்.
(அந்த நேரம் அவர் ஜன்னலில் தெரியும் தன் போஸ்டரைப் பார்க்க அதில் 'BORN TO WIN' என்று அச்சிட்டிருப்பது இயக்குனரின் நக்கல்)
Chennaiyil Oru Naal Movie (17)
அவரது மனைவியாக வரும் ராதிகா சரத்குமார் இதைவிடப் பிரமாதமான பாத்திரங்களையெல்லாம் கடந்தவர் என்பதால் நடிகை என்பதைவிட படத்தின் தயாரிப்பாளராகப் பெருமை பெறுகிறார்.
சிறுத்த உருவமுள்ள சேரனுக்கு போலீஸ்காரர் வேடம் கொடுத்திருப்பது அந்தப் பாத்திரத்தை அவரால் சுமக்க முடியும் என்கிற நம்பிக்கையால் மட்டும்தான் என்று புரிகிறது. அதை அவரும் ஆர்ப்பாட்டமில்லாமல் சுமந்திருக்கிறார்.
டிராபிக் கமிஷனராக சரத்குமார் அறிமுகம் ஆக, பரபரப்பெடுக்கிறது திரைக்கதை. அந்தப் பாத்திரத்துக்கு தோற்றம், நடிப்பு இரண்டிலும் 'சரத்' ரொம்பப் 'பொருத்'.
பாராட்ட இத்தனை அம்சங்கள் இருந்தும் படத்தில் குறைகளும் இல்லாமலில்லை. திடீர் வில்லனாகும் பிரசன்னாவின் பாத்திரம் உண்மைக்கதையில் பரபரப்புக்காக செருகப்பட்ட கற்பனை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தன் மனைவி துரோகம் செய்துவிட்டாள் என்பதற்காக அவளைக் காரில் ஏற்றிக் கொல்லும் அளவுக்குப் போவதும், போலீஸில் மாட்டாதிருக்க தன் கடமையையும் மறந்து இன்னொரு கொலைக்குத் துணிவதும் உயிர் காக்கும் ஒரு 'கார்டியாக் சர்ஜன்' செய்கிற வேலையாகத் தெரியவில்லை.
சேரனுடன் உதவிக்கு இன்னொரு போலீஸையோ மாற்று டிரைவரையோ அனுப்பாமல் அவரே போனை அட்டென்ட் பண்ணிக்கொண்டு அவரே காரையும் ஓட்டிக்கொண்டு... பரிதாபம். ஓயாமல் அவரிடம் பேசிக்கொண்டே இருக்கும் சரத் வேறு, டாக்டர் பிரசன்னா ஒரு கொலையாளி என்பதை சம்பந்தமே இல்லாமல் சொல்லி அவர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறார்.
'பூ' பார்வதி ஏற்கனவே முத்தலாகத் தெரிய அந்த தோசைக்கல் கண்ணாடியையும் மாட்டி காதலன் சச்சினுக்கு அக்கா போல ஆக்கிவிடுகிறார்கள்.
நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருப்பது ஒரு சினிமா ஹீரோவின் தவறா..? அந்தக் கேரக்டரை ரொம்பவே போட்டுப் பார்க்கிறார்கள். அவர் நடிப்பதை விட்டுவிட்டால் அவர் மனைவி சந்தோஷப்படுவாரா..?
Chennaiyil_Oru_Naal_Movie_Stills_Photos_27
அதேபோல் ஒரு அப்பாவாக ஒரே மகனின் இறப்பு ஜெயப்பிரகாஷை நிலைகுலையச் செய்யலாம். ஆனால், ஒரு மருத்துவராக, மூளைச்சாவு அடைந்த மனிதனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க வழியேயில்லை என்பதைப் புரிந்து கொள்ள மறுப்பதில் லாஜிக் இல்லை.
ஆனால் ஜெயப்பிரகாஷும், லஷ்மி ராமகிருஷ்ணனும் வழியில் காரை நிறுத்தி தங்கள் மகனைப் பறிகொடுத்த சோகத்தைப் பகிர்ந்துகொள்ள, பின்னணியில் அவர்களது மகனின் இதயம் போலீஸ் காரில் விரைவதைக் காட்டும் 'ஷாட்' அற்புதமானது. வெல்டன் டைரக்டர்..!
ஷேகநாத் ஜே.ஜலாலின் துல்லிய ஒளிப்பதிவும், 'அஜயன் பாலா'வின் தெள்ளிய வசனங்களும் படத்தின் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. ரிலீசாகவிருக்கும் தன் படம் பற்றிக் கேட்கும் ஹீரோ பிரகாஷ்ராஜிடம் "கிளைமாக்ஸ் சூப்பர்ன்னு சொல்றாங்க சார்..." என்று மேனேஜர் சொல்ல, "அப்ப கிளைமாக்ஸை மட்டும் ரிலீஸ் பண்ணுவாங்களா என்ன..?" என்று பிரகாஷ்ராஜ் கிண்டலடிப்பது 'அஜயன் பாலா'வின் 'நயம் சரக்கு..!'
படம் நிறைவு பெறும் தருவாயில் படம் முழுதும் பயணப்பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய 'கிளாப்ஸை' திடீர் விருந்தாளியாகி வசூலித்துக் கொண்டு போக வருகிறார் சூர்யா. அவர் போன்ற பெரிய நட்சத்திரங்கள் இது போன்ற சமுதாயச் செய்தி சொல்லும் படங்களில் முக்கிய கேரக்டரே ஏற்கலாம்.
அங்கங்கே குறைகள் இருந்தாலும் நிறைவான படம் என்பதில் ஐயமில்லை. ஆனால் இதயம் தேவைப்படும் சிறுமி ஒரு வி.ஐ.பியின் மகளாக இல்லாமல், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு ஏழையாக இருந்திருந்தால் இத்தனை சிரத்தை எடுத்திருப்பார்களா என்கிற கேள்வியும் எழாமலில்லை.
- வேணுஜி