32 வருடங்களுக்கு முன் ஒரிஜினல் 'தில்லு முல்லு' எடுக்கப்பட்ட போதும் இதே சந்தேகம் இருந்தது. "ஆக்க்ஷன்' ஹீரோவான ரஜினியை வைத்து இந்தக் காமெடிக்கூத்து ஒர்க் அவுட் ஆகுமா..?" என்று. அந்த விஷப் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொண்டு டிஸ்டிங்க்ஷனில் பாஸானார் 'இயக்குனர் சிகரம்' கே.பாலசந்தர்.
அதே சந்தேகம் - இந்த 'தில்லு முல்லு' ரீமேக்கின் போதும். "சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த கேரக்டரில் 'ஷிவா' தாங்குவாரா..?" என்று. அந்த சந்தேகம் இப்போதும் தவிடு பொடியாகி இருக்கிறது - சின்ன டீமை வைத்து 'தில்லு'டன் களமிறங்கி நம்மை சிரிக்க வைத்திருப்பதில் 'புரமோஷன்' பெற்றிருக்கிறார் இயக்குனர் பத்ரி.
அந்த முயற்சி டைட்டில் போடுவதிலிருந்தே தொடங்கி விடுகிறது. சூப்பர் ஸ்டார் நடித்த கேரக்டரில் ஷிவா நடிப்பதே காமெடிதான் என்பதை, ஷிவாவுக்கு 'அகில உலக சூப்பர் ஸ்டார்' என்று பட்டம் கொடுத்துப் புரிய வைத்து விடுகிறார்கள்.
அங்கேயே 'சூப்பர் ஸ்டார்' நினைவுகளைக் கழற்றி வைத்துவிட்டு அகில உலக உலக சூப்பர் ஸ்டார் ஷிவாவை மட்டுமே திரையில் எதிர்பார்த்து ரசிக்க ஆரம்பித்து விடுகிறோம்.
அதேபோல் ஒரு படம் ரீமேக் செய்யப்படும் போது முந்தைய படத்தை மிஞ்சும் வகையில் கற்பனயையையும், காட்சிகளையும் கால மாற்றத்துக்கேற்றவாறு மிகுதி படுத்தும் முயற்சி இருக்கும். ஆனால் ஷிவாவுக்கு இருக்கும் இமேஜ் அந்த வேலையையும் 'தரை ரேட்டு'க்குக் குறைத்து விட்டது.
முன்னதில் ரஜினி செய்யும் ஆள்மாற்ற 'தில்லு முல்லு' வேலைகளுக்கு ஒருவரை மீசை வைத்தும், இன்னொருவரை மீசை இல்லாமலும் காட்டியதைப் போல, இதில் அந்தக் கஷ்டம் கூட வைக்காமல் எப்போதும் போல் வந்தால் 'அண்ணன்' ஷிவா, 'பூனைக்கண்' லென்ஸோடு வந்தால் 'தம்பி' ஷிவா என்று வைத்து 'சுளுவாக' நம்மை சுளுகெடுத்து விடுகிறார்கள்.
அதற்கும் கூட ஷிவா, "சே... என்ன ஒரு கஷ்டம்டா சாமி, லென்ஸெல்லாம் மாட்டி...." என்று அலுத்துக் கொள்வது கவுண்டர் பாணியில் சொன்னால், "உலக மகா நடிப்புடா சாமி..!'
ஷிவாவின் பலமே அவரது இலகுவான மாடுலேஷன்தான். அவர் முதலாளி பிரகாஷ்ராஜ் "நீங்க ஃபேஸ் புக்குல இருக்கீங்களா..?" என்ற கேள்விக்கு "இல்ல சார், மயிலாப்பூர்ல இருக்கேன்..." என்பதாகட்டும், "காந்திக்கு அப்புறம் டிரெஸ்ஸுக்காக 'கலாய்' வாங்குனது நான்தான்..." என்பதிலாகட்டும் அதை ஷிவா சொல்வதால் மட்டுமே சிரிக்க முடிகிறது.
மிகப்பெரிய தண்ணீர் சுத்திகரிப்பு கம்பெனி வைத்திருக்கும் பிகாஷ்ராஜின் மகளுக்கு கராத்தே கற்றுக்கொடுக்க வந்து விட்டு, "கராத்தே ஒண்ணும் தண்ணி வடிகட்டி விற்கிற ஈஸியான வேலை இல்ல சார்..." என்று போகிற போக்கில் அவர் கொடுக்கும் லந்து, படத்தின் எல்லா சந்து பொந்துகளிலும் நிரம்பி வழிகிறது.
ரஜினி இடத்தில் ஷிவாவை ஒப்பீடு செய்யாமல் பார்க்க முடிவதைப் போலவே தேங்காய் சீனிவாசன் இடத்தில் பிரகாஷ்ராஜை ஒப்பீடு செய்யாமல் ரசிக்கலாம். ஷிவா மீது சந்தேகம் வரும்போதெல்லாம் வெகுண்டு பின்னர் ஷிவா சொல்லும் சாதாரணப் பொய்களால் கன்வின்ஸ் ஆகும்போது 'மாங்காய்' சீனிவாசனாக மாறிப்போகிறார் அவர்.
கோவை சரளாவின் கேரக்டரைசேஷனில் சின்னக் குழப்பம் இருந்தாலும், கள்ளச் சாராயம் விற்கும் அவரை முருக பக்தையாக்கி, அவர் வாயைத் திறந்தால் கூவத்தைக் கிளறிய கதையாகிப் போகும் என்பதால், அவர் நாக்கில் 'அலகு' குத்தி விடுவது அமர்க்களம். பேச முடியாவிட்டாலும் சரளா அடிக்கும் லூட்டிகள் 'படு' சரளம்.
எதை மாற்றியதைப் பொறுத்துக் கொண்டாலும், காந்தக் 'கண்"ணகியான மாதவி நடித்த கேரக்டரில் கண்டிப்பாக 'இஷா தல்வாரை' ஒத்துக்கொள்ளவே முடியவில்லை. ஒரு முருக பக்தரான தமிழ்நாட்டு அப்பா பிரகாஷ்ராஜுக்கு எப்படி 'பக்கா நார்த் இன்டியன் லுக்'கில் மகள்..? ஒருவேளை, பிரகாஷ்ராஜின் (இறந்துபோன) மனைவி நார்த் இன்டியனோ என்றாலும் அவரது மாமியார் சச்சு, சுத்த தமிழ் பேசிக்கொண்டு வருகிறார்.
இதைச் சொல்லியே ஆக வேண்டும். ஹீரோயின் 'இஷா தல்வாரை' விட ஷிவாவின் தங்கையாக வரும் மோனிஷா 'சூப்பர்..!' ஆனால், பாவம் அந்தப் பெண்ணை 'பரோட்டா' சூரிக்கு 'பாயா'வாக்கி விட்டார்கள்.
வழக்கமாக லுங்கியில் வரும் சூரிக்கு இதில் பேண்ட் சட்டை, புரமோஷன். "நாங்க எல்லாம், 'குத்துனவன் நண்பனா இருந்தா உயிர் போனாக்கூட வெளியே சொல்லாத' குரூப்பைச் சேர்ந்தவய்ங்க..." என்று சொல்லும் அவர் காமெடியை ரசிக்கமுடிகிறது.
மனோபாலாவும், இளவரசுவும் அங்கங்கே டிங்கர், பட்டி நகைச்சுவைக்கு உதவ, கிளைமாக்ஸில் வந்து களை கட்டுகிறார் சந்தானம். அவரைக் 'காமெடி சூப்பர் ஸ்டார்' என்கிறார்கள் டைட்டிலில். ரஜினி இடத்தில் 'ஷிவா' என்றால், முன்னதில் 'கமல்' வந்த இடத்தில் இதில் 'சந்தானம்' ஓகேதானே..? ஆனால், முன்னதில் வந்த கிளைமாக்ஸை முற்றிலும் மாற்றி, இதில் கிராண்டியராகவும், கியாரண்டியாகவும் சிரிக்க வைத்திருக்கிறார் டைரக்டர் பத்ரி.
மெனக்கெட்ட விஷயம் என்றால், முன்னதில் தேங்காய் சீனிவாசன் வீட்டு காம்பவுண்ட் தாண்டாத திரைக்கதையை இதில் துபாய்க்கு 'விசா'.எடுக்க வைத்திருப்பது. படம் பிடித்த லக்ஷ்மணுக்கு பாராட்டுகள்.
படத்தில் றெக்கை கட்டிக்கொண்ட திரைக்கதைக்கு அங்கங்கே வரும் பாடல்கள் மட்டும் சின்ன ஸ்பீட் ப்ரேக்கர்கள் (யுவன் இசையில் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும்...) அதுவும் படம் முடியப்போகும் நேரத்தில் ஒரு டூயட் வரும்போது அதிர்ச்சியாக இருக்கின்றது. ஆனால், என்றும் சலிக்காத 'ராகங்கள் பதினாறு...' ரீமிக்ஸாக அது அமைய, அதன் இசையில் லயித்து அந்த அதிர்ச்சியை மறக்கிறோம்.
படம் முடித்து விட்டு வெளியே வரும்போது மீண்டும் 'அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்' ரஜினியும், 'ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி' தேங்காய் சீனிவாசனும், மனதில் வந்து போகிறார்கள். (அதுதான் முந்தைய படத்தின் வெற்றி)
ஆனாலும், கவலையை மறந்து இந்தப்படமும் சிரிக்க வைப்பதில் வெற்றியே கண்டிருப்பதால், அந்தக் கவலைகளோடு முந்தைய படத்தையும் மறந்து விட்டு சிரிக்கலாம்..!
No comments:
Post a Comment