தலைப்பில் எந்த சங்கதியும் இல்லை. ‘லோ பட்ஜெட் படம்’ என்பதைத்தான் இப்படி ‘லோ பட்ஜெட் பழத்தை’ வைத்துச் சொல்லியிருப்பாரோ இயக்குநர் கோவிந்த மூர்த்தி…?
டெல்லியில் ஆரம்பிக்கும் படத்தில் நாயகன் செந்தில், நம்மிடம் கதை சொல்ல ஆரம்பிக்க, சென்னையில் விரிகிறது பிளாஷ்பேக். தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தும் இளவரசுவின் மகன்தான் செந்தில். அப்பாவுக்கு ‘விருதுநகர் பவன்’ என்ற பெயரில் பல கிளைகளுள்ள ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டுமென்பது கனவு.
அதற்காக, மகனிடம் படிப்பைத் தூக்கி எறிந்துவிட்டு தன் டிபன் கடையை முன்னேற்ற உதவி செய்யச் சொல்கிறார். ஆனால், செந்திலோ ஓயாமல் படித்துக்கொண்டே இருக்கிறார். அப்படி என்ன படிக்கிறார் என்கிறீர்களா..? அதையும் சொல்லிவிட்டால் இன்டெர்வல் பாய்ண்டில் சுவாரஸ்யத்துக்கு வேறு விஷயங்களில்லை என்பதால் அதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் சீரியஸ் விஷயமும் அதுதான் என்பதால் ‘எங்கே செல்லும் இந்த பாதை..?’ என்று இலக்கில்லாமல் நகர்கிறது முன்பாதிப்படம். நண்பன் ஜெகனுடன் சேர்ந்து பெண்கள் பின்னால் அலைவதைவிட வேறொன்றும் செய்யவில்லை செந்தில்.
காதல்…காதல்… என்று இருவரும் அலையும் முன்பாதியில் செந்தில் விருப்பப்படியே ‘தோல் சீவிய பப்பாளி’ போல ஹீரோயின் இஷாரா அறிமுகமாகிறார். அவர் ஓட்டி வரும் ‘டிவிஎஸ் 50′ சாலையில் தடுமாறி விழ, அவர் வாங்கி வரும் பப்பாளிப்பழமும் கீழே விழுகிறது. (இதுதான் தலைப்புக்குப் படத்தில் இருக்கும் ஒரே சம்பந்தம்)
பிறகு… இருவரும் அலுக்க அலுக்க இன்டெர்வல் வரும்வரை காதலிக்கிறார்கள்… காதலிக்கிறார்கள்… காதலி…க்க்கி…றார்…கொர்…கொர்…கள். இஷாராவின் அம்மா சரண்யா பொன்வண்ணனும், அப்பா நரேனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்கள் என்பதால் மகளின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்ட… புதிதாய் முளைக்கிறது பிரச்சினை, செந்திலுக்கு இருக்கும் லட்சியம் தொடர்பாக. அதுவரை அவர் என்ன படிக்கிறார் என்கிற ரகசியமும் அதன்மூலம் உடைகிறது – அவர் ஐ.ஏ.எஸ் ஆக விரும்புகிறார்.
ஐ.ஏ.எஸ் ஆவது எப்படி பிரச்சினையாக முடியும் என்று அப்பாவியாகக் கேட்காதீர்கள். அதை வைத்துதான் அடுத்த பாதிப்படத்தை ஓட்ட இயக்குநர் நினைத்திருந்ததால்… அது பிரச்சினைதான். தலையைச் சுற்றிக் காதைக் கடந்து மூக்கைத் தொட்டு ஒரு பிரச்சினையை இன்டர்வெல்லில் சொல்கிறார் இயக்குநர்.
நாம் ‘ரெஸ்ட் ரூம்’ போய் வந்ததும், அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று அடுத்தடுத்த காட்சிகளில் விளக்கி, காதலர்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்து விடுகிறார்கள் சரண்யா – நரேன் தம்பதி. அப்புறம் என்னய்யா பிரச்சினை என்கிறீர்களா..?
படம் முடிந்ததும், ‘மருமகனை ஐ.ஏ.எஸ். ஆக்கிய மாமியாரின் கதை இது…’ என்கிற ஒன்லைன் ஒருமாதிரி புரிந்துவிடுகிறது. அது சத்தியமாகத் தமிழில் இதுவரை வராத கதைதான்.
தன்னால் என்ன முடியும் என்பதை செந்திலும், அவரால் என்ன முடியும் என்பதை இயக்குநரும் புரிந்து வைத்திருப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் செந்தில் நடித்துத் தள்ளியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னால் ஐ.ஏ.எஸ்.ஆக முடியாது என்று மனைவி, மாமியாரிடம் அவர் உடைந்து அழும் இடம் நெகிழ வைக்கிறது.
ஒட்டு ‘மொத்த’ப் பார்வைக்கு விளைந்த ‘பப்பாளி’ போலிருக்கும் இஷாரா, குளோசப்பில் காண்பித்தால், ‘ப்ப்ப்ப்பா..!’ என்றிருக்கிறார். அதென்னமோ தெரியவில்லை, செந்தில், இஷாரா, காமெடியன் ஜெகன் என்று ஒவ்வொருவருக்கும் குளோஸ் அப்களாக வைத்துத் தள்ளி பயமுறுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்.
வழக்கமாக ஹீரோவின் அம்மாவாக வந்து அவன் காதலுக்கு உதவும் சரண்யா பொன்வண்ணன் இதில் மாறி ஹீரோயினின் அம்மாவாக வந்து அதேபோல் காதலுக்கு உதவி செய்கிறார். சற்றே அலுக்க வைக்கும் பாத்திரப்படைப்பு என்றாலும் சரண்யா போனில் பாடும் ‘சொய்… சொய்… புபுபுப்…’ பாடல் அமர்க்களம்..!
எந்த அப்பா தன் மகன் கலெக்டர் ஆவதை விரும்ப மாட்டார்..? ஆனால், ‘உன்னைப் படிக்க விட்டேனா பார்…’ என்று இளவரசு செய்யும் அலம்பல்களுக்கு முகாந்திரம் இல்லாததால் அவர் நடிப்பு ‘ஓவர் லோட்…’ ஆகிப் போகிறது..!
.jpg)
No comments:
Post a Comment