வாழும் காலத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட இந்திய கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜுனை இந்திய சினிமாவும் காலம் காலமாகக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. இந்தக் குறையைத் தீர்க்கக் களமிறங்கி வெற்றியும் கண்டிருக்கிறார் தமிழ்த்திரையுலகம் மெச்சக் கூடிய இயக்குநர் ஞானராஜசேகரன்.
ராமானுஜன் பிறந்த கும்பகோணத்தில் தொடங்கி, சென்னை ‘போர்ட் ட்ரஸ்ட்’ தொடர்ந்து லண்டன் ‘கேம்பிரிட்ஜ்’ வரை பயணப்பட்ட அந்த மகா மேதையின் வாழ்க்கை வரலாற்றை ஒரு உலக முயற்சியாக செல்லுலாய்டில் சித்திரித்திருக்கிறார் இயக்குநர்.
கணித உலகில் பூஜ்ஜியத்தின் பெருமையைத் தன் ஆறாவது வயதிலேயே கேள்வியாகக் கேட்டு ஆசிரியரைத் திக்குமுக்காடவிட்ட ராமானுஜன், அந்த ஆரம்பப்பள்ளிப் பருவத்திலேயே கோவிலில் வினியோகிக்கும் கொழுக்கட்டை, சுண்டல் எத்தனை பேருக்குக் கிடைக்கும் – கிடைக்காது என்று கணக்கிடுவதில் தொடங்கி, கல்லூரி மாணவர்களுக்கு ‘ட்ரிகனாமெட்ரி’யை டியூஷன் எடுத்தது வரை ரசிக்கத்தக்க வகையில் சொல்லியிருக்கிறார்.
உடற்பயிற்சி ஆசிரியர் ‘தேகாப்பியாசம்’ (உடற்பயிற்சி) செய்ய அழைக்கும்போது, “இல்லை… சார்… நான் எண்களுடனேயே தொடர்ந்து அப்பியாசம் செய்து வருகிறேன்… அதுவே போதும்…” என்று சொல்லி விலகும் அந்தக் குண்டுக் குழந்தை ராமனுஜனைக் கொஞ்சலாம் போல் அத்தனை ஆழமான மென்மை.
வளர்ந்த ராமானுஜனாக ‘அபிநய் வாடி’. அறிமுகக் காட்சியிலேயே தன் தோற்றத்தில் தாத்தா ஜெமினி கணேசனை நினைவு படுத்துகிறார். நடிப்பிலும் பாட்டி சாவித்ரியைத் தொட முயல்வது தெரிகிறது. கணிதத்தில் மூழ்கிவிட்டால் காலம் நேரம் போவது தெரியாமல் அதிலேயே கிடப்பதும், மனைவியின் அருகாமையில் மட்டும் காதலில் திளைப்பதுமாக ஒரு மேதையாகவே வாழ்ந்திருக்கிறார் அபிநய்.
இன்றைக்கு ‘சாயாஜி ஷின்டே’ வில்லனாக நடித்துக் கொண்டிருந்தாலும், ‘மகாகவி பாரதி’யின் சலனப்பதிவுக்கு அவர் உருவம்தான் நம் கண்முன் வந்து நிற்கிறது.
அதைப்போலவே ராமானுஜனின் உருவம் என்றால் இனி காலத்துக்கும் நம் நினைவில் வரப்போவது அபிநய்யின் உருவம் மட்டுமே. அந்த வகையில் ஒரு நடிகனாக, அழியாப்புகழ் தேடிக்கொண்டுவிட்டார் அபிநய். அதற்கு அவர் காலமெல்லாம் ஞானராஜசேகரனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
சதா சர்வ காலமும் எண்களுடன் வாழும் நிலையில், உடல் நோயும் சேர்ந்து கொள்ள எப்போதும் ஒரு அலுப்புடனேயே தெரியும் அவரை வழக்கமான கதாநாயகர்களுடன் ஒப்பிடாமல், வாழ்ந்த சரித்திர நாயகனாகப் புரிந்துகொண்டால் அந்தப் பாத்திரத்துடன் ஒன்ற முடியும்.
தனக்கு இருந்த ஒரே ஆறுதலான மனைவியையும் பிரிந்து லண்டனில் தனிமைப்படும் அவரது சோகம் விவரிக்க முடியாதது. இப்போது இருப்பதைப்போல மொபைல் போனில் உலகெங்கும் பேசும் வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், கடிதம் ஒன்றே ஒற்றைத் தொடர்புச் சாதனமாக கப்பல் வழியாக மட்டுமே சென்று சேர்ந்து கொண்டிருக்க, அப்படி மனைவிக்கு அவர் எழுதிய மிகச்சில கடிதங்களையும் அவரது அம்மா (சுஹாசினி) மனைவியின் கண்ணில் படாமல் மறைத்துவிடுவது ஆனாலும்… துயரம்..!
ராமானுஜனுக்கு அல்ப ஆயுள் என்பதை சோதிடர் மூலம் அறிந்துகொண்டதால்தான் அப்படி மனைவியை அவரிடமிருந்து விலக்கி வைக்கிறார் என்று ஓரளவுக்கு அவர் பாத்திரத்தை நியாயப்படுத்துகிறார் இயக்குநர். இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ராமானுஜனின் வாழ்வில் நடந்ததா இல்லை சுஹாசினிக்காக அந்த வில்லத்தனத்தை அவர் நியாயப்படுத்துகிறாரா என்பது இயக்குநருக்கான கேள்வி.
ராமனுஜனின் வாழ்வில் கணிதத்துக்கு அடுத்து சின்ன மகிழ்வைத் தந்த மனைவியின் பாத்திரத்தில் பாமா. அப்பாவியான அந்த முகம் அப்படியே அந்தப் பாத்திரத்துடன் ஒன்றிப்போகிறது.
ராமானுஜனின் தந்தையாக நிழல்கள் ரவி, தேகாப்பியாச ஆசிரியராக தலைவாசல் விஜய், கலெக்டராக சரத்பாபு, அவரது உதவியாளராக மனோபாலா என்று எண்ணற்ற நடிகர்கள் அங்கங்கே வந்து போகும் பாத்திரங்களில் வந்தாலும் கவனிக்க வைக்கிறார்கள்.
“ஒரு ‘ஹார்டி’ மட்டும் இல்லேன்னா நானும் இப்படித்தானே இந்த மண்ணுல திரிஞ்சுக்கிட்டிருப்பேன்..?” என்று மனநிலை பாதிக்கப்பட்டு தெருவில் அலையும் தலைவாசல் விஜய்யைக் காட்டி அபிநய் சொல்லும் காட்சி உள்ளத்தை உலுக்குகிறது. அந்த அளவுக்கு ராமானுஜனின் நிஜ வாழ்க்கையில் அவரை அடையாளம் கண்டு, லண்டனுக்கு அழைத்து அவரை உலகின் கவனத்துக்குக் கொண்டு சென்ற ‘கேம்பிரிட்ஜ்’ பேராசிரியர் ஹார்டிக்கு கும்பகோணத்தில் கோவில் எழுப்பினாலும் குற்றமில்லை. அந்த வேடத்தில் நடித்திருக்கும் நடிகரைக் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது.
இந்தியாவைத் தங்கள் வசப்படுத்த, இந்தியர்களின் கல்வியறிவை முடமாக்கி, அறிவியலில் பல ஆண்டுகள் பின்தங்கச் செய்த ஆங்கிலேயர்களில் ஒருவரான ஹார்டிதான் அகல்விளக்காக இருந்த ராமானுஜனை...

No comments:
Post a Comment