வேலைக்குப் போகாமல் ‘தண்டச்சோறாக’ அப்பாவிடம் அர்ச்சனை வாங்கும் படங்கள் ஆறேழில் தனுஷ் நடித்திருக்கிறார் என்றாலும், தன் 25வது படமான இதில் அவர் ஏற்றிருக்கும் அதே வேடம் கொஞ்சம் பிரத்யேகமானது.
இந்நாட்டு இளைஞர்களின் முக்கியமான பிரச்சினை ஒன்றைத் தொட்டு அவரை நடிக்க வைத்திருப்பதில் கவனம் பெறுகிறார் இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான வேல்ராஜ்.
பொதுவாக ‘எஞ்சினீயரிங்’ படிப்பே இனி வேலைக்கு ஆகுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள நிலையில், குறிப்பாக ‘சிவில் எஞ்சினீயரிங்’ (கட்டடப் பொறியியல்) படித்த லட்சோபலட்சம் இளைஞர்களின் எதிர்காலம்..?
அப்படி ஒரு பற்றியெரியும் பிரச்சினையைத் தொட்டிருப்பதற்காகவே இயக்குநருக்கு ‘சபாஷ்’ போடலாம். அந்த வகையில் இந்த ‘தண்டச்சோறு’ ஸ்பெஷல் மணம், குணம், சுவையுடன் சூடாகப் பரிமாறப் பட்டிருக்கிறது. அதனுடன் இரண்டு பிள்ளைகள் இருக்கக்கூடிய நடுத்தரவர்க்கக் குடும்பத்துக்குள் இருக்கும் ஏற்றத்தாழ்வு மனப்பான்மையும் சரிவிகித ‘சைட் டிஷ்’ ஆக சேர்த்துக் கொண்டிருக்கிறார் அவர்.
அதேபோல் இன்னொரு சுவாரஸ்யம், தனுஷின் ரசிக்கத்தக்க சினிமா அப்பாக்களான (மலையாள) முரளி, ரகுவரன் வரிசையில் இதில் சமுத்திரக்கனி.
வேலையில்லாத மகனைக் கரித்துக் கொட்டுவதையே பிரதான வேலையாகக் கொண்டிருக்கும் அவர், பக்கத்து வீட்டில் விழுந்த பந்தை எடுத்துக் கொண்டு வரும் தனுஷைப் பார்த்து, “இதே மாதிரிதான் பதினாறு வயசிலயும், பக்கத்து வீட்ல இருந்து பந்தோட வந்தே… அப்பவாவது உன்னோட விளையாட பத்துப் பசங்க இருந்தாங்க. இப்ப அவங்களும் வேலைக்குப் போயிட்டாங்க. நீ மட்டும் இப்ப தனியா விளையாண்டுகிட்டு இருக்கே..?!” என்பது நடுத்தர வீடுகளில் அன்றாடம் கேட்கப்படும் ‘தேசிய சோகம்..!’
அத்தனைத் திட்டுகளையும் தாண்டி, மகன் மேல் உள்ளுற வைத்திருக்கும் ஊமைப் பாசத்தில் ‘ஆழ’ சமுத்திரமாகிறார் அசத்தல் கனி..!
கூடவே, “அவனுக்கு ‘கார்த்திக்’ன்னு ஹீரோ பெயர். எனக்கு ‘ரகுவரன்’னு வில்லன் பெயர்..!” என்று அவர் பொருமுவதையும் ரசித்துச் சிரிக்கலாம். அம்மாவிடம் துடைப்பத்தில் அடிவாங்குவதிலாகட்டும், தம்பியை ‘டிராப்’ பண்ணிவிட்டு இருபது ரூபாய் கூலி வாங்கிக் கொள்வதிலாகட்டும்...
No comments:
Post a Comment